Advertisment

பக்தர்கள் - பணியாளர் மோதல்: ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்தது என்ன? - அறநிலையத்துறை விளக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TN HR CE explanation on Srirangam temple devotees and security guards clash Tamil News

முதலில் வாக்குவாதமாக தொடங்கிய சண்டை பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கியதில் பக்தர் முகத்தில் காயம் ஏற்பட்டது.

Srirangam-ranganathaswamy-temple | trichy: திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 'பூலோக வைகுண்டம்' என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக ஸ்ரீரங்கநாதர் கோவில் உள்ளது. சுக்கிரன் தலமாகவும் போற்றப்படும் இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

Advertisment

இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி விழா இன்றைய தினம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க உள்ளது. 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய அம்சமாக வரும் 23ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் கோவில் காவலாளிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளார். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் முந்திக்கொண்டு செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து காவலாளிகளுக்கும் ஆந்திராவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

முதலில் வாக்குவாதமாக தொடங்கிய சண்டை பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கியதில் பக்தர் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காவலாளி மீது நடவடிக்கை எடுக்க கோரி பக்தர்கள் கூச்சலிட்டனர். அங்கு வந்த உதவி ஆணையர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவில் வளாகத்தில் பக்தர்கள் காவலாளி இடையே சண்டையிட்ட சம்பவம் கோவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளக்கம்

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆந்திராவைச் சேர்ந்த 34 பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என மிகுந்த ஓசை எழுப்பி உண்டியலை பிடித்து பக்தர்கள் ஆட்டிக்கொண்டிருந்தனர். 

அப்போது கேள்வி கேட்ட கோவில் பணியாளரை தலை முடியை பிடித்து அதே உண்டியலில் மோதச் செய்துள்ளனர். மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்யவிடாமல் அந்த பக்தர்கள் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டனம் - போராட்டம்

இதனிடையே, கோவிலுக்குள் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், "இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு அரசாங்கம், இந்துக் கோவில்களில் இருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பியிருக்கிறார்கள்.

நீண்ட வரிசையில் பக்தர்களை காத்திருக்க வைத்ததை ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்பியதன் விளைவாக, கோவில் வளாகத்திற்குள் ரத்தக்களரி ஏற்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையை கோவில் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பாஜக ஏன் விரும்புகிறது? என்பதற்கு அவர்களின் இத்தகைய ஆணவமும் ஒரு காரணம்.

கோவில் புனிதத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக தமிழக பாஜகவின் திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்." என்று பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Trichy Srirangam Ranganathaswamy Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment