TN IAS Officers Association Resolution Against Minister CV Shanmugam: வலுவான தலைவர்களாக சொல்லப்படும் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்தபோதுகூட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நேரடி மோதலை வைத்துக் கொண்டதில்லை. எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை சகாக்கள் சரமாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பாய்ந்து பிராண்டுவது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.
தமிழ்நாட்டில் புதிதாக உருவெடுத்திருக்கும் புயல் பிரச்னை இதுதான். இந்தப் பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டவர், தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இவர், ‘மருத்துவர்கள் கூறியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. அதைச் செய்யவிடாமல் தடுத்தது யார்?
மத்திய அரசு ஜெயலலிதாவுக்குத் தனி விமானம் தருகிறோம். அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க முழு வசதிகளையும் செய்து தருகிறோம் என்றது. அதையும் தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் எனச் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஜெயலலிதாவின் உயிரைவிட, இந்திய மருத்துவர்களின் கௌரவம் முக்கியம் என்று கூறிய ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும்’ என ஆவேசப்பட்டார் சி.வி.சண்முகம்.
அமைச்சர் ஜெயகுமார் இந்தப் பிரச்னையில் உடனடியாக சி.வி.சண்முகத்தின் குரலுக்கு ஆதரவு கொடுத்தார். ‘சி.வி.சண்முகத்தின் கோரிக்கையை நானும் ஆதரிக்கிறேன்’ என்றார் அவர். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘அமைச்சர் பேசிய விவகாரம் அவரது சொந்தக் கருத்து’ என ஒதுங்கிக்கொண்டார். இதிலேயே அமைச்சர்கள் இடையே இந்தப் பிரச்னையில் கருத்து வேறுபாடு இருப்பது அம்பலமானது.
இந்நிலையில் தான் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், ‘சுகாதாரத்துறைச் செயலாளருக்கு எதிராக அமைச்சர் பொதுவெளியில் பேசியிருப்பது விசாரணை நடைமுறையைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ஆஜராகி தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அளித்த மருத்துவத்துக்கு ஒரு அதிகாரி பொறுப்பாக முடியாது. ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக முடிவு செய்தது மருத்துவர்கள் தானே தவிரச் சுகாதாரத்துறைச் செயலாளருக்கு இதில் பங்கு இல்லை. மேலும், அதிகாரிகள் அமைச்சர்களுக்கும் சட்டசபைக்கும் உட்பட்டுத் தான் செயல்படுகின்றனர். பொதுவெளியில் அமைச்சர் இப்படிப் பேசுவது சட்ட நடைமுறையைப் பாதிக்கும்.
அரசாங்கத்துக்குச் சேவை செய்யும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிரந்தர அரசு ஊழியர்கள். அவர்கள் இந்திய சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அவர்கள் பொது வெளியில் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக அமைச்சர் குற்றம்சாட்டும் பொழுது, அதற்கு எதிர் கருத்தோ அல்லது தனது தரப்பு விளக்கத்தையோ பொது வெளியில் தெரிவிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உரிமை இல்லாதநிலையில், அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது அரசாங்க நன்னடைத்தை விதிகளை மீறியது. அவ்வாறு அவர்கள் செயல்பட்டால் அது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையாகக் கருதப்படும். பொதுவெளியில் அமைச்சர்கள் கூறும் இதுபோன்ற கருத்துகள் மனவேதனை அளிக்கிறது. இவ்விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
சட்ட அமைச்சரே சட்டத்தை மீறிவிட்டதாகவும், முதல்வர் அவரை கட்டுப்படுத்த வேண்டும் என்பதையே சற்று மென்மையான வார்த்தைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் தீர்மானமாக நிறைவேற்றியது. இதில் விசேஷம், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் யார் மீது புகார் கூறுகிறாரோ, அந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இந்த ஆட்சியில் தொடக்கம் முதல் அதே பதவியில் இருக்கிறார். ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 3 முதல்வர்கள் காலத்திலும் சுகாதாரத் துறையில் தொடர்கிறார்.
அண்மையில் கஜ புயல் பாதிப்பு நிகழ்ந்தபோது, களத்தில் நின்று பணியாற்றிய முக்கிய அதிகாரிகளுள் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸும் ஒருவர். 2004-ல் சுனாமி பாதிப்பின் போதும் சிறப்பாக செயல்பட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்றவர் அவர்.
அவரைத்தான் இப்போது அமைச்சர்கள் டார்கெட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கிடையே கடலூரில் ஒரு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், ‘ராதாகிருஷ்ணன் நல்ல அதிகாரி’ என குறிப்பிட்டார். அவ்வளவுதான், அருண்மொழித் தேவன் உள்பட ஆளும்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிமுக வரலாற்றில் இல்லாதவிதமாக தலைமைச் செயலகத்தில் நின்று ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.-க்கு பின்னணியில் டிடிவி தினகரன் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
இவ்வளவு நடந்தும், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இந்த நிமிடம் வரை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.-க்கு எதிராக எதையும் பேசவில்லை. எனவே விஜயபாஸ்கரை டார்கெட் செய்யவே ராதாகிருஷ்ணனை அமைச்சர்கள் சிலர் கலாய்ப்பதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிடிவி தினகரனுக்கு நெருக்கமாக இருந்தவர். இரு மாதங்களுக்கு முன்பு மெரினாவில் அவர் தன்னிடம் பேசியதாக டிடிவி தினகரன் கூறியதும், விஜயபாஸ்கர் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் நடந்தது. இந்தச் சூழலில் டிடிவி தினகரனை கடுமையாக எதிர்த்து வரும் சி.வி.சண்முகம், ஜெயகுமார் ஆகியோர் ராதாகிருஷ்ணனை குறி வைப்பதையும், இந்தத் தகராறில் இருந்து ஓபிஎஸ் ஒதுங்குவதையும் கூர்மையாக கவனிக்க வேண்டியிருக்கிறது.
இதற்கிடையே ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சமூகம் சார்ந்த கட்சிப் பிரமுகர்களை வைத்தே பதிலடி கொடுப்பதும் இந்த விவகாரத்தில் உள்ள அரசியலைச் சொல்வதாக இருக்கிறது. அதாவது, இது வெறுமனே ஐ.ஏ.எஸ். – அமைச்சர்கள் மோதல் மட்டுமல்ல, அமைச்சர்கள் இடையிலான மோதலின் இன்னொரு பரிமாணம் என்கிறார்கள், அதிமுக வட்டாரத்தில்.
அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தினர், அந்த தீர்மானத்தை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் வழங்கியிருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் போயிருக்கிறது.
நெருக்கடியான இந்த காலகட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பகைத்துக் கொண்டு ஒரு அரசு இயங்க முடியாது. அரசு டெண்டர் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக கவனித்து வரும் திமுக தரப்பு, இது போன்ற மோதலை ரசிக்கவே செய்யும். அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் திமுக.வுக்கு கசியுமானால், அது ஆட்சிக்கு ஆபத்தாக முடியவும் வாய்ப்பு இருக்கிறது.