Advertisment

மேகதாது, ராசி மணல் அணை: தமிழக, கர்நாடகா விவசாயிகள் தஞ்சையில் முக்கிய ஆலோசனை

மேகேதாட்டு அணை, ராசி மணல் அணை கட்டுவது தொடர்பாக தமிழக-கர்நாடக விவசாயிகள் தஞ்சாவூரில் ஒன்று கூடி கலந்துரையாடினர்.

author-image
WebDesk
New Update
TN Karna farm

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டின்படி நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு, கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குறுபுறு சாந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

Advertisment

கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் மேகேதாட்டு அணை கட்டுவதன் அவசியம் குறித்தும், தமிழகத்தில் ராசி மணல் பகுதியில் அணை கட்டுவது குறித்தும் இரு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து பேசினர்.

கூட்டத்தில் கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குறுபுறு சாந்தகுமார் பேசியதாவது, "கர்நாடகாவில் காவிரி நீரை நம்பி தான் விவசாயிகளும், பொதுமக்களும் உள்ளனர். பெங்களூரில் உள்ள சுமார் ஒன்றரை கோடி மக்களுக்கு குடிநீர் என்பது காவிரி நீரை நம்பி தான் உள்ளது. கடந்தாண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

கர்நாடகாவில் 38 லட்சம் போர்வல் உள்ளது. இதில் வறட்சியால் 28 லட்சம் போர்வெல் பாதிக்கப்பட்டது. நீரை சேமிக்க வேண்டுமானால் குளம், குட்டைகளை தூர்வார வேண்டும். இதனை நாங்கள் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறோம். மேகேதாட்டு அணை அமைப்பதன் மூலம் அங்கு காடுகள் அழிக்கப்படும். 

WhatsApp Image 2024-08-28 at 13.29.39

இந்த அணை தொடர்பாக இரு மாநில விவசாயிகளின் தலைவர்களும் அவர்களது பக்கம் உள்ள நியாயத்தை பேசுகின்றனர். இக்கூட்டத்தில் ராசி மணல் அணை கட்டுவது தொடர்பாக தமிழக விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துகளை தாங்கள் உள் வாங்கியுள்ளோம். தஞ்சாவூர் பயணத்தை முடித்துக் கொண்டு கல்லணை, மேட்டூர் அணை, ராசிமணல், மேகேதாட்டு ஆகிய இடங்களை பார்வையிட்ட பின்னர் தாங்கள் தங்களது மாநில விவசாயிகள், பிரதிநிதிகள், அரசியல் கட்சி தலைவர்களிடம் எடுத்துரைப்போம். இதில் ஒவ்வொருவரின் அணுகு முறையும் ஒரு விதமாக உள்ளது.

WhatsApp Image 2024-08-28 at 13.29.41

அடுத்தக் கட்டமாக இரு மாநில விவசாயிகளும் மைசூர் அல்லது மாண்டியா என்ற இடத்தில் கலந்து பேச நடவடிக்கை எடுக்கப்படும். அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கலாம். தமிழக விவசாயிகள் விரும்பினால் காவிரி குடும்பத்தினரையும் அழைத்து பேசலாம். அதைத் தொடர்ந்து இரு மாநில விவசாயிகளும், இரு மாநில முதல்வர்களையும் சந்தித்து பேசுவோம். இதன் மூலம் இரு மாநில விவசாயிகளும் சகோதரத்துடன் செயல்பட இந்த கூட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது" என்று குறுபுறு சாந்தகுமார் கூறினார்.

கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது; "மேகேதாட்டு அணை கட்டுவதன் மூலம் 10 டிஎம்சி தண்ணீரை பெங்களூரில் உள்ள மக்களுக்கு குடிநீருக்காக பம்பு மூலம் இறைத்து எடுத்துக் கொள்வதாக கர்நாடக கூறுகிறது. இந்த அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. உபரி நீர் மட்டுமே திறந்துவிடப்படும். இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கபடுவார்கள். 

TN Karna farm

குடிநீர் இல்லாமல் தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் ராசி மணலில் அணை கட்டினால், கர்நாடகா கூறும் 10 டிஎம்சி தண்ணீரை குழாய் மூலம் எடுத்துக் கொள்ளலாம். மேலும், இரு மாநிலங்களும் மின் உற்பத்தியை செய்து கொள்ளலாம். ஒரு கரை தமிழ்நாட்டுக்கும், மறுகரை கர்நாடகவுக்கும் சொந்தம் என்பதால் எந்தவித இடற்பாடுகளும் வராது.

இதனை கர்நாடக விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். ராசி மணலில் அணை கட்டினால் 60 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். மழைக் காலங்களில் வரும் உபரி நீரை ராசி மணலில் தேக்கி கொள்ளலாம். கடலில் வீணாக தண்ணீர் கலக்கும் என்ற செய்திக்கு நாம் முற்றுப் புள்ளி வைக்கலாம்" என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். கூட்டத்தின் முடிவில் தஞ்சாவூர் பெரிய கோயில் புகைப்படத்தை தமிழக விவசாயிகள், கர்நாடக விவசாயிகளிடம் வழங்கினர். இந்த கூட்டத்தில் இரு மாநிலங்களைச் சேர்ந்த தலா 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment