உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்னதாக, தமிழ்நாடு அரசு 1 ட்ரில்லியன் ட்ரீம்ஸ் #OneTrillionDreams என்ற தனித்துவமான சமூக ஊடக பிரச்சாரத்தை செவ்வாய்கிழமை தொடங்கியது. இது மாநிலத்தின் வலுவான தொழில்துறையின் வெற்றிகரமான மனிதர்களின் கதையை முன்னிலைப்படுத்துகிறது.
சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசு பொருளாக மாற்ற இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்களில் பணிபுரியும் தனிநபர்களின் வெற்றிக் கதைகளை விவரிக்கும் முயற்சியே இந்த பிரச்சாரம். இது ‘#FacesBehindNumbers” என்று தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக அர்ப்பணிப்புள்ள பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“#1 ட்ரில்லியன் ட்ரீம்ஸ் #OneTrillionDreams பிரச்சாரத்தின் மூலம், தமிழ்நாட்டின் தொழில்துறையில் பேசப்படாத நாயகர்களைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த செய்திகள் ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல், நமது மாநிலம் வழங்கும் பரந்த வாய்ப்புகளுக்கு உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும். ஏனெனில், நமது பலம் நமது மக்கள் - படித்த, திறமையான மற்றும் கடின உழைப்பாளிகள் நமது தொழில்கள் மற்றும் பணியிடங்களை மேம்படுத்துகிறது” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
இதனிடையே, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக சென்னை வர்த்தக மையத்தில் கட்டுமானப் பணிகளை தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார். பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும், சிவ்தாஸ் மீனா உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு இடத்திற்கு செல்லும் ஜி.எஸ்.டி சாலை மற்றும் மவுண்ட்-பூந்தமல்லி சாலையை சரிபார்த்து, சேதமடைந்த இடங்களில் சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் எம்.டி எம் ஏ சித்திக் மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“