Ponmudi | chennai-high-court: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி இல்லத்தில் தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுதிப்பினர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் என பலரும் குவிந்து வருகிறார்கள். இதனால், அப்பகுதியில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறமாக உள்ள பொன்முடி இல்லத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்றுள்ளார். பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து சட்டரீதியாக அடுத்த கட்டம் என்ன செய்யலாம் என்பது குறித்து பேசுவதற்காக அமைச்சர் ரகுபதி சென்றுள்ளார். மேலும், பொன்முடியின் அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பாக விவாதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்முடியின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டுள்ளனர். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் அங்கு சென்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“