ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருப்பதாவது:-
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சை கண்டிக்கிறோம். என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது பேச சொல்வதை பேசுகிறாரா? கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த துரோகத்தை மறக்க மாட்டார்கள்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் போராட்டம் கல்விக்கானது. மாநில மக்களின் உரிமைக்கானது. அது வெல்லும். எங்களை பொறுத்தவரை அது ஆர்.எஸ்.எஸ்.கல்விக் கொள்கை. அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம், தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.
எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர் தான், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில், தி.மு.க எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு, பிறகு யாரோ ஒரு சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எதிர்ப்பதாக, மக்களவையில் இன்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியிருக்கிறார்.
பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து ஆலோசிக்க குழு அமைத்த பிறகே முடிவு என தெளிவாக கூறியிருந்தோம். நாட்டின் நம்பர் ஒன் முதல்வரான ஸ்டாலின் தான் சூப்பர் முதல்வர். கொள்கையை விட்டுவிட்டு பணத்தை பெற்றுக்கொள்வதில் என்ன பயன்? ஒன்றிய அரசு நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். நாகரீகமற்றவர்கள் என்று ஒன்றிய அரசு கூறியதில் இருந்தே அவர்களின் மனநிலை புரிகிறது.
தமிழ்நாட்டில் மாணவர்களை மந்தப்படுத்த ஒன்றிய அரசு முனைகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதால் தான் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுகிறார்கள். தேசிய கல்விக்கொள்கையில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி கருத்துகளை அனுப்பினோம்.
புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் 3000 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் நிலைக்கு ஆளாவோம். மும்மொழிக்கொள்கை எனும் சங்கிலியை காலில் கட்டிவிட்டு ஓடு ஓடு என்கிறார்கள். அனைத்திலும் முதல் பரிசு பெறுவதால் தமிழக அரசை ஓட விடமாட்டேன் என்கிறார்கள். கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கல்வி நிதி விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க எம்.பிக்களுக்கும் இடையே இன்று மக்களவையில் கடும் விவாதம் நடந்தது. ஒன்றிய அமைச்சர் பேசியது, வேதனை அளித்ததாக தி.மு.க எம்.பி கனிமொழி புகார் கூறினார். இதையடுத்து, தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து டெல்லியில் தி.மு.க எம்.பி திருச்சி சிவா பேசுகையில், "மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்லை மீறி பேசுகிறார். மும்மொழிக் கொள்கையில் எங்களுக்கு புரிதல் இல்லை என தர்மேந்திர பிரதான் பேசுவதற்கு அதிகாரம் இல்லை. முதல்வர் குறித்து தர்மேந்திர பிரதான் பேசியது ஏற்புடையது அல்ல. நாகரீகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த தமிழ்நாட்டு எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.
செய்தி: க.சண்முகவடிவேல்.