Tamil Nadu DMK Minister E. V. Velu Tamil News: மதுரை அண்ணா நகரில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்களும், தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி செயல்பட்டார். தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி எங்கள் பேருந்து என மக்கள் அழைக்க காரணமாக இருந்தவர், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குடிநீர் நல வாரியம் அமைத்துத் தந்தவர், கோவில் கருவறைக்குள் நம்மவர்களை நுழைய அனுமதிக்கவில்லை என்பதால் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.
ஆன்மீகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி நமது ஆட்சி. நம்மை ஆன்மீகத்திற்கு எதிரானவர்களாக காண்பிக்க எதிர்கட்சியினர் முயல்கின்றனர். ஆனால் அது நடக்காது. திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது. நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதி அல்ல. காவி அணிந்து நல்லது செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்ற கிளையை கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை" என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை குறித்த பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியது இன்று காலையில் தான் தெரியவந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான வார்த்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். உயர்நீதிமன்ற கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்கு பதிலாக தவறான வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.