க.சண்முகவடிவேல்
திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், 13 ஆம் நாள் போராட்டத்தின்போது திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் மீட்டு கைது செய்தனர். இதனை தொடர்ந்து 16 வது நாளாக தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவருடைய கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு விவசாயிகளிடம், உங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு செல்வதாகவும், முதல்வரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்க அனுமதி பெற்று தருவேன் என உறுதி அளித்து சென்றார். தொடர்ந்து மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் எங்களது காதில் பூசுத்தி ஏமாற்றி வருகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு தெரிவிக்கையில்:-
பிரதமர் மோடி விவசாயிகளுக்கு இருமடங்கு விலை தருவதாக கூறினார். இதே போல் அமித்ஷா கோதாவரி-காவிரி இணைப்பு நிதி ஒதுக்கப்படும் என்றார். மேலும், பிரதமர் பென்ஷன் திட்டத்தை எல்லா விவசாயிகளுக்கும் தருவதாக தெரிவித்தார். ஆனால் விவசாயத்தை எதுவுமே செய்யாமல் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த அமைச்சர் புண்ணிய ஸ்தலம் என்று கூட பார்க்காமல் விவசாயிகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்ததாக பெரிய பொய்யை சொல்லி சென்று இருக்கிறார். இப்படி பொய் சொல்லி எங்களது காதில் பூவே சுற்றி சென்றிருக்கிறார் அமித்ஷா.
இன்று தமிழக அமைச்சர் நேரு மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் எங்களை நேரில் சந்தித்து தனியார் நிதி நிறுவனங்கள் விவசாயிகளிடம் அடாவடி செய்யாமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எங்கள் கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் காவிரி தொடர்பாக முதலமைச்சர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழக முதல்வரை சந்திப்பதற்கு அனுமதி பெற்று தருவதாகவும் சொல்லி சென்றார் என தெரிவித்தார். அமைச்சர் கே என் நேரு ஐயாக்கண்ணுவை சந்தித்த நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.