தமிழக சட்டப் பேரவையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் முக்கிய அறிவிப்புகளை நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (சனிக்கிழமை) அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:-
"ரூ.80.00 கோடியில் 29,000 மக்கள் பயன்பெறும் வகையில் வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.800 கோடியில் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.150 கோடியில் 25 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். பேரூராட்சிகளில் ரூ.315.50 கோடியில் 575 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.
பேரூராட்சிகளில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் தள்ளு வண்டிகளுக்கு மாற்றாக 500 மின்கல வாகனங்கள் மற்றும் 150 இலகுரக வாகனங்கள் வாங்கப்படும். ரூ.200 கோடியில் பேரூராட்சிகளிலுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். ரூ.18 கோடியில் சென்னையில் 15 இடங்களில் மழைநீர் தொட்டிகள் அமைக்கப்படும். ரூ.19.65 கோடியில் பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க 500 பேட்டரி வாகனங்கள், 1100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2500 எண்ணிக்கை மெட்டாலிக் காம்பாக்டர் குப்பை சேகரிக்கும் தொட்டிகள், 5 டிரக்குகள் மீது பொருத்தப்பட்ட கிரேன்கள் கொள்முதல் செய்யப்படும்.
சென்னையில் ரூ.10 கோடியில் 14 புதிய பூங்காக்கள் மற்றும் 6 நவீன விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டு ரூ.35 கோடியில் பள்ளிக் கட்டடங்கள் மேம்படுத்தப்படும், ரூ.30 கோடியில் 16 புதிய பள்ளிக் கட்டடங்கள் அமைக்கப்படும்." என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“