குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: கோவையில் விரைவில் தொடக்கம்; அமைச்சர் நேரு தகவல்

"கோவை மாநகராட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் தொடங்க இருக்கிறோம். முதலமைச்சரின் அனுமதியை பெற்று அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது." என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
TN Minister KN Nehru electricity from waste project coimbatore Tamil News

கோவை கொடிசியா அரங்கில் 8 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.

கோவை கொடிசியா அரங்கில் 8 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த அதிகாரிகளுடன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு பேசுகையில், "ட்ரோன் சர்வே என்பதை முதல்வர் நிறுத்த சொல்லி விட்டார். சொத்து வரியில் அபராத விதி என்று சொல்லுவதற்கு காரணம் என்னவென்றால், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக செலுத்தி விட்டால் ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைத்துக் கொள்கிறோம். அதே போல் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செலுத்துபவர்களுக்கு அபராதம் வசூலிக்கிறோம். தற்போது முதல்வர் அதையெல்லாம் நிறுத்த சொல்லிவிட்டார். இனிமேல் வரி மட்டும் தான் வசூல் செய்வோம். 

ஏற்கனவே ட்ரோன் சர்வே மூலம் விதிக்கப்பட்ட வரிகளும் ரத்து செய்யப்படும் என்று கூறியவர், வெள்ளலூரில் ஏற்கனவே பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது, அதனுடைய சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. திருச்சியில் இருந்து வந்து கோவையை இணைக்கும் சாலையில், சாலையை விரிவு படுத்தினால் மட்டும் தான் அது சாத்தியமாகும். தற்போது வரை நிறைய பணம் செலவு செய்யப்பட்டு இருக்கிறது, மாற்று ஏற்பாடு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 

புறநகரில் ஒரு பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்று இங்கு இருக்கிறவர்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டால் அதற்கான பணிகளும் தொடங்கப்படும். கவுண்டம்பாளையம் பேருந்து நிலையம் பயன்பாடு இல்லாமல் இருப்பதற்கு, ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். 

Advertisment
Advertisements

சூயஸ் திட்டம் வருகிற 8 வது மாதத்திற்குள் முடிவடையும். ஆனால் அவர்கள் தற்போது தாமதப்படுத்தி இருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி பெறுவது மற்றும் சாலைகளை தோண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் அனைத்து பணிகளும் முடிவு பெற்று சாலைகள் மீண்டும் அமைக்கப்படும். 

ஹெல்த் அண்ட் வெல்னஸ் சென்டர் அடுத்த மாதம் திறக்க உள்ளோம். சாலை பணிகளும் நடைபெற்று வருகிறது. விரைவாக பணிகள் முடியும். நகராட்சிக்கு அருகில் இருக்கும் ஊராட்சிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கிராமங்களை, நகராட்சியுடன் இணைப்பை முன்னெடுத்தோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது குறித்து முதலமைச்சர், ஆய்வு செய்ய பரிந்துரைப்பார். 

கோவை மாநகராட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் தொடங்க இருக்கிறோம். முதலமைச்சரின் அனுமதியை பெற்று அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. கோவை மட்டுமல்ல அருகில் இருக்கும் பகுதிகளில் இருந்தும் குப்பையை கொண்டு வந்து கொட்டுவதற்கு வசதிகளை செய்ய இருக்கிறோம். 

என்றைக்குத்தான் அண்ணாமலை இந்த ஆட்சியைப் பற்றி நல்லது சொல்லி இருக்கிறார். அவர் எப்போதுமே மோசமானவைகளைப் பேசி தகுதியை மீறி கீழே இறங்கி கொண்டு இருக்கிறார். இது அவருக்கு அழகு அல்ல. ஆனால் மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். வருகிற தேர்தலிலும் முதலமைச்சர் தான் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார்" என்று அவர் கூறினார்.

செய்தி: செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Coimbatore K N Nehru

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: