/indian-express-tamil/media/media_files/2025/02/22/2cPbyTVqUJNWXDGNY5ac.jpg)
திருச்சியில் நடைபெற்ற 8 மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வரியை உயர்த்தி வழங்கினால் தான் நிதி தர முடியும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது என்றார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்சி கலையரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள், மேயர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்று தங்கள் பகுதிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் குறித்து கோரிக்கைகளை அமைச்சரிடம் மனுவாக வழங்கி பேசினர்.
இதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: “இந்தக் கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை, கழிவுநீர் ஓடைகள், எல்இடி விளக்குகள், அறிவுசார் மையம், கழிவறை, மின்மயானம் கேட்டுள்ளீர்கள். நிகழாண்டு இந்தப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கப்படும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் எந்தப்பணி முக்கியமானதோ அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும்.
மார்ச் 14-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. ஓரிரு நாளில் மானியக் கோரிக்கை வந்துவிடும். திட்ட அறிக்கை வந்தால் அதற்கான நிதி ஒதுக்க வசதியாக இருக்கும். வரி வசூலில் ட்ரோன் மூலம் சர்வே செய்யத் தேவையில்லை. 15 ஆண்டு காலம், 10 ஆண்டு காலம் என ஒரே நடைமுறையில் இருந்த சொத்து வரி விதிப்புகள் எல்லாம் இன்று மறுசீரமைக்கப்பட்டு 15 முதல் 20% வரை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. வரியை உயர்த்தி வழங்கினால் தான் நிதி தர முடியும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. எனவே தான் தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. ஆண்டுக்கு 6 சதவீதம் மட்டுமே வரி உயர்வு செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் என்ற விகிதாச்சார அடிப்படையில் வரி விதிப்பு கொண்டு வரலாம் என்றும் பேரிடர் காலங்களில் அந்த வரி விதிப்பை நிறுத்தி வைக்கவும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 6 சதவீத வரிவிதிப்பு மட்டுமே இருக்க வேண்டும், வேறு எந்த வரி விதிப்புகளும் கூடாது என்று முதல்வர் கூறி உள்ளார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், தஞ்சை மாவட்டத்துக்கு ரூ.2140.89 கோடி, நாகப்பட்டினம் ரூ.2,080.58 கோடி, திருவாரூர் ரூ.1,982.10 கோடி, திருச்சி ரூ.4,148.25 கோடி, பெரம்பலூர் ரூ.621.12 கோடி, அரியலூர் ரூ.158.30 கோடி, புதுக்கோட்டை ரூ.566.39 கோடி, மயிலாடுதுறை ரூ.371.36 கோடி என மொத்தம் ரூ.12,068.99 கோடி முதல்வர் ஒதுக்கி தந்துள்ளார். நிகழாண்டு நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.980 கோடியை தமிழக முதல்வர் வழங்கி உள்ளார்.
தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் ஜூலை மாதத்துக்குள் முடிவடையும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை, முதுநிலை, இளநிலைப் பொறியாளர்கள் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றாமல், அந்தந்தப் பகுதிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டும். நீங்கள் பார்க்கும் பாதிப்புகள், தேவைகள் குறித்து அதை நோட் (குறிப்பு) போட்டு நிர்வாக இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். குடிநீர் வாரியத்துக்கு 200 பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மக்கள் பணியில் விரைந்து செயல்பட வேண்டும். தேர்தல் வருவதற்குள் ஆட்சியில் அறிவித்தத் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு செல்ல வேண்டும் என பேசினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், “மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மயிலாடுதுறையில் 83 குளங்களுக்கு ரீ-சார்ஜ் செய்யும் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். புதுக்கோட்டைக்கு பாதாளசாக்கடைத் திட்டம், ஆலங்குடிக்கு அறிவுசார் மையம் வேண்டும் என்றார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: “திருவெறும்பூர் தொகுதியில் பாதாளசாக்கடைத் திட்டம், சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டும். 647 இடங்களில் ரூ.80 கோடிக்கு சாலை அமைக்க வேண்டி உள்ளது. திருவெறும்பூர் பேருந்து நிலையம் கட்ட விரைந்து அடிக்கல் நாட்ட வேண்டும். அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அகற்றப்பட்டு வந்தாலும், அங்கு 7 ஆண்டுகளுக்கு எதுவும் செய்ய முடியாது. எனவே, அங்கு பூங்கா அமைக்க வேண்டும். சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்தால் அதன் உரிமையாளர்கள் கவுரவப்பிரிச்சினையாக பார்க்கின்றனர் என்றார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது: அரியலூர் நகராட்சிக்கு போதிய வடிகால் வசதி வேண்டும். தினசரி மார்க்கெட் வேண்டும். ஊருக்கு வெளியே மின்மயானம் உள்ளது. ஊருக்குள் ஒரு மின்மயானம் வேண்டும். மினி பேருந்துகளுக்கு புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. எனவே மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் எங்கெங்கு மினி பேருந்துக்கான புதிய வழித்தடம் வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநிலங்கவை எம்பி கல்யாணசுந்தரம், எம்பிக்கள் துரைவைகோ, அருண்நேரு, ஆர்.சுதா, செல்வராஜ், முரசொலி, அரசு முதன்மை செயலாளர் டி.கார்த்திகேயன், அரசு கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.விஜயகுமர், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதிய மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், ஆட்சியர் மா.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது; ஆண்டு தோறும் வரி உயர்த்தித் தந்தால் தான் மத்திய அரசு நிதி பங்கீடு செய்யும் என கூறியது. அதனால் தமிழக சட்டப் பேரவையில், ஆண்டு தோறும் 6 சதவீதம் மட்டுமே வரி உயர்வு விதிக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மழை, வெள்ளக் காலங்களில் வரி உயர்வு இருக்காது.
மேலும், ட்ரோன் சர்வே மூலம் கட்டிடத்தை அளந்து வரி போடப்பட்டது. அதை நிறுத்தி வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே ட்ரோன் சர்வே இனி இருக்காது. பேரவையில் கொண்டுவரப்பட்ட 6 சதவீதம் வரி உயர்வு மட்டுமே இருக்கும். குப்பை வரி, 6 ஆண்டுக்கு முன்பிருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்த வரி வசூலிக்கும்போது முந்தைய ஆண்டிலிருந்து குப்பை வரியை கணக்கெடுக்க வேண்டியதில்லை. நிகழாண்டு முதல் இந்த ஆண்டுக்கான குப்பை வரியை மட்டும் வசூலித்தால் போதும் என்றார். அப்படியானால் முந்தைய ஆண்டுகளுக்கான குப்பை வரி எப்பேது வசூலிக்கப்படும் எனக்கேட்டபோது, அதிகாரிகள் கேட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். பொதுமக்கள் கொடுத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியது தான் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.