/indian-express-tamil/media/media_files/2025/09/10/tn-minister-kn-nehru-on-hurdles-for-vijay-tvk-campaign-trichy-tamil-news-2025-09-10-20-34-13.jpg)
"அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும்போது தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்களுக்கு அந்த இடத்தை கொடுக்கவில்லை." என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.
திருச்சியில் வரும் 13 ஆம் தேதி விஜய் தனது பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார். இதற்காக த.வெ.க அனுமதி கேட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் கடும் நிபந்தனைகளுடன் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு ஆளுங்கட்சியான தி.மு.க இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தோல்வி பயத்தில் தி.மு.க விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி தர மறுப்பதாக த.வெ.க குற்றம் சாட்டியது. எனினும், தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், த.வெ.க-வுக்கு இடையூறு தந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத இடமாகப் பார்த்துதான் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி கொடுக்கிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எங்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் சிந்தாமணி அண்ணா சிலை கொடுக்கவில்லை. பல இடங்களில் அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும்போது தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்களுக்கு அந்த இடத்தை கொடுக்கவில்லை.
அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் குறிப்பிட்ட இடங்களை அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்காக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதன் பின் குறிப்பிட்ட இடங்கள் பிரச்சாரம் செய்வதற்காக ஒதுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் இடங்களில் எந்த இடத்தையும் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவல்துறை அனுமதி அளிப்பது கிடையாது. நாங்கள் ஏன் த.வெ.க-வினர் பிரச்சாரத்திற்க்கு இடையூறு செய்து என்ன செய்யப் போகிறோம்?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசியவர், "பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் ஆட்டோ நிறுத்துவதில் உள்ள பிரச்சனை வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் பேசி தீர்வு காணப்படும்.
சத்திரம் பேருந்து நிலையத்தில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பேருந்துகள் அனைத்தும் சாலையில் நிற்கிறது. வேண்டுமென்றால் பெரம்பலூர், அரியலூர் பேருந்துகள் பஞ்சப்பூரிலிருந்து இயக்கிக் கொள்ளலாம். புதுக்கோட்டை தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு விரைவில் பைபாஸ் ரைடர் பேருந்து சேவை துவங்கப்பட உள்ளது.
பஞ்சபூரில் கட்டி திறக்கப்படாமல் உள்ள சரக்கு முனைய கடைகள் இரண்டு மூன்று முறை டெண்டர் விடப்பட்டுள்ளது. கடைகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு செயல்பாட்டிற்கு வரும். அதே போல் காந்தி சந்தை கட்டும் பணி மூன்று மாதத்தில் முடிவடையும். முடிந்தவுடன் சரக்கு முனையம், காந்தி சந்தை ஒரே நேரத்தில் திறந்து செயல்படத் துவங்கும்" என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.