நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்று வழங்கும் வகையில் 'தாயுமானவர்' திட்டத்தைச் சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து திருச்சி உறையூர் பகுதியில் தாயுமானவர் திட்டம் இன்று துவங்கப்பட்டது. முதலமைச்சரின் தாயுமானவன் திட்டத்தை திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு இன்று தொடங்கி வைத்தார்.
உறையூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் கே என் நேரு அப்பகுதியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "முன்பெல்லாம் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது கலைஞர் ஆட்சி காலத்தில் அது சரி செய்யப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/6912562b-af3.jpg)
தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். இது மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. இந்த திட்டத்திற்காக 1128 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் 88 ஆயிரம்
பேர் பயனடைய உள்ளனர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டத்தை சுமூகமாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுத்து வருகிறார். வட மாநில தொழிலாளர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது தகவல் தவறானது. துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது, அதற்கு கால அவகாசம் தேவை.
அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். நிச்சயம் அது பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும். நான் அவர்களை சென்று சந்திக்கவில்லை எனக் கூறுவது தவறு. ஏற்கனவே நான்கு முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்திய உள்ளேன். துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
அ.தி.மு.க ஆட்சியில் 17,000 பேரை துப்புரவு பணியாளர்களாக நிரந்தர பணியில் அமர்த்தினோம் என அதிமுக அமைச்சர் கூறினார் ஆனால் அவர்கள் யாரும் துப்புரவு பணிக்கு செல்லவில்லை. துப்புரவு பணியாளர்களுக்கு உள்ள பிரச்சனை நாடு முழுவதும் உள்ள பிரச்சினை இதில் முதலமைச்சர் உரிய முடிவு எடுப்பார். துப்புரவு தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தூய்மை பணி பாதிக்க கூடாது என்பதற்காக ஏற்கனவே பணியில் உள்ளவர்களை தான் பயன்படுத்தி வருகிறோம், புதிதாக யாரையும் துப்புரவு பணிக்கு எடுக்கவில்லை.
/indian-express-tamil/media/post_attachments/a7c77133-775.jpg)
தெரு நாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவு அருமையான உத்தரவு. அந்த உத்தரவு நகல் வந்த உடன் அதனை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவோம். மிகப்பெரிய பிரச்சனையான தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது. நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறோம். அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாமல் அறிவிக்காத வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார் தேர்தல் வருவதால் எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை கூறி வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, அதில் ஒரு தீர்வு ஏற்பட்டவுடன் இன்று அல்லது நாளைக்குள் தூய்மை பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்றார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள தாயுமானவன் திட்டம் தங்களுக்கு மிகுந்த பயனுள்ள வகையில் இருக்கின்றது, ரேஷன் கடைக்கு தங்களால் நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வர முடியாத நிலையில், தற்போது வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் தேடி வருவது சிறப்பாக உள்ளது. இதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், இதற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பயனாளிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.