தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாகவே விஜயகாந்த்க்கு உடல்நலப் பிரச்சனைகள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு கடந்த 18ஆம் தேதி மாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்தது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜயகாந்துக்கு சளி தொற்று சரியாவதற்கு கூடுதல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே விஜயகாந்த்க்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் உடனடியாக தே.மு.தி.க அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டது.
இந்தநிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள விஜயகாந்த் உடல்நிலைக் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மா.சுப்பிரமணியன் கூறுகையில், விஜயகாந்துக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு தேவையான பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. முதலில் அவரது கணையத்தில் கற்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்குப் பிறகு சிறிய கொழுப்பு கட்டிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இன்றோ, நாளையோ அவருக்கு முழு பரிசோதனைகள் செய்யப்பட்டு அதற்கான முடிவுகள் வந்துவிடும். அதனைத்தொடர்ந்து டெஸ்ட் முடிவுகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும். நான் மருத்துவமனை நிர்வாகத்திடம் விஜயகாந்த் உடல் நிலைக் குறித்து கேட்டறிந்தேன். ஐ.சி.யூ.,வில் இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“