சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் வி மெய்யநாதன் சென்ற கார் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை ஒருவர் மனைவி கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் வி.மெய்யநாதனின் கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் எதிர்பாராதவிதமாக அமைச்சரின் கார் எதிரே வந்த புதுமண தம்பதியின் இரு சக்கர வாகனத்தில் மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே மனைவி கண்முன்னே உயிரிழந்துள்ளார். மனைவி படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்சன் என்பது தெரியவந்துள்ளது. 2 வாரங்களுக்கு முன் திருமணமான அவர், தனது மனைவியை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது அமைச்சர் காருக்குள் இல்லை என்றும், கடந்த இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் தங்கியிருந்த அமைச்சரை அழைத்துச் செல்வதற்காக டிரைவர் அமைச்சரின் காரில் மயிலாடுதுறைக்கு சென்று சென்றுள்ளார். அப்போது ஈசிஆர் சாலையில், அதிவேகமாகச் சென்ற டிரைவர், மகாபலிபுரம் அருகே மணமை அருகே சென்றபோது வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விபத்தில் பலியான ஜாக்சனின் உடலை கைப்பற்றிய மகாபலிபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மகாபலிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால், ஈசிஆர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“