Ramanathapuram | ongc | Meyyanathan Siva: தமிழக எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், 'ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக திமுக அரசு நிராகரிக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக இந்த திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், பெருமளவு விவசாய நிலங்களும் பாதிப்படைவதை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு எனது தலைமையிலான கடந்த அதிமுக அரசில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அத்தகைய நச்சுத் திட்டங்களால் தமிழகம் ஒருபோதும் பாதிப்படையா வண்ணம் முற்றுப்புள்ளி வைத்தேன்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல. இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின், தி.மு.க-வின் முந்தைய ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, படித்துபார்க்காமல் கையெழுத்திட்டுவிட்டேன் என பின்னர் மாற்றிக் கூறிய வரலாறு உண்டு.
ஆகவே, கடந்த காலத்தை போல முதல்வர் ஸ்டாலின் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ள கூடாதெனவும், தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஒஎன்ஜிசி-யின் இந்த செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டுமெனவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக இந்த திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 6, 2023
தமிழகத்தில் மீத்தேன்…
அமைச்சர் மெய்யநாதன் விளக்கம்
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்) ஓ.என்.ஜி.சி நிறுவனம் முன்வைத்த கோரிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் அமைச்சர் மெய்யநாதன் சிவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட விவசாய நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம், அவர் உரிய முடிவு எடுப்பார்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.