மதுரை வடக்கு மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி இளைஞரணியின் சார்பில், இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து பழங்காநத்தத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி. மூர்த்தி கலந்து கொண்ட உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க வேண்டிய மிக முக்கியமான கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒருங்கிணைந்த இந்தியாவில், தமிழகத்தின் ஓட்டு அளிப்பு வலிமையை குறைக்கும் வகையில், மறு தொகுதி வரையறை திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த முயல்கிறது. இது நடைமுறைப்பட்டால், தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறைந்து, வட மாநிலங்களுக்கு அதிகப்படியான அதிகாரம் குவியும் அபாயம் உள்ளது.
மொழி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் கூட உயிர் தியாகம் செய்ததன் நினைவாக, ஜனவரி 25 அன்று வீரவணக்க நாளாக நினைவு கூறி வருகிறோம். தமிழகம் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் தொடர்ந்தும் போராடும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து 10 தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மேற்கு தொகுதியில் கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைத்து, அனைத்து நிர்வாகிகளும் இணைந்து தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஐயப்பன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் ஆ. வெங்கடேசன் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் சுதன், வட்டச் செயலாளர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி. பி. ராஜா, இளம் பேச்சாளர் இளம் ஜெய் ஸ்ரீ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பரவை அன்புச்செல்வன் நன்றி கூறி நிறைவு செய்தார்.