scorecardresearch

புதிதாக பொறுப்பேற்கும் ஐ.டி துறையில் தமிழகத்தை முதல் மாநிலம் ஆக்குவேன்: அமைச்சர் பி.டி.ஆர் அறிக்கை

தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம் என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவியேற்றுள்ள பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

TN minister Palanivel Thiaga Rajan’s latest tweet on cabinet reshuffle Tamil News
Tamil Nadu minister Palanivel Thiaga Rajan’s (PTR) on Thursday was moved to the IT Ministry from the Finance Ministry.

Tamil Nadu minister Palanivel Thiaga Rajan’s latest tweet on cabinet reshuffle Tamil News: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பது பின்வருமாறு:-

கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் (’21 – ’22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் (’22 – ’23, ’23 – ’24) சமர்ப்பித்துள்ளேன். முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.

நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.

உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான #1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.

தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம். எனவே, எனக்கு முன்னாள் இத்துறையை நிருவகித்த திரு. மனோ தங்கராஜ் அவர்களின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற ஐடி தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.

இன்று பொறுப்பேற்கும் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn minister palanivel thiaga rajans latest tweet on cabinet reshuffle tamil news