Minister-p-k-sekar-babu | chennai: சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுப்பட்டு வருகிறது. 60 ஏக்கரில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் இந்தப் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சட்டசபையில், சி.எம்.டி.ஏ.,வுக்கான மானிய கோரிக்கை விவாதங்களின் போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 'கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனையம்' என்று பெயர் சூட்டப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
இந்த பேருந்து முனையம் 2022 அக்டோபரில் திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பணிகள் முடியாததால், பேருந்து முனையம் திறப்பு தாமதமானது. கடந்த மே மாத இறுதியில் இங்கு ஆய்வு செய்த சி.எம்.டி.ஏ.,வுக்கான அமைச்சர் சேகர்பாபு, 'புதிய பேருந்து நிலையம் ஜூன் இறுதியில் அல்லது, ஜூலையில் திறக்கப்படும்' என்று அறிவித்தார். ஆனால், பேருந்து முனைய முகப்பு பகுதியில் மழைநீர் தேங்கியதால் அதற்கு மாற்று வழியாக ஜி.எஸ்.டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது.
மழைநீர் வடிகால் பணிகள் முழுவதுமாக நிறைவுபெற்ற பின்னர், இந்த (செப்டம்பர்) மாதத்தில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பேருந்து முனையத்தை பொறுத்தவரை தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன என்றும், ஜி.எஸ்.டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது, செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் முழுவதுமாக நிறைவுபெறும் என்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தீபாவளிக்குள் (12.நவம்பர்) திறக்கப்படாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர் பாபு துறை அதிகாரிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஆய்வு செய்தார். மேலும், ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணியையும் ஆய்வு செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தாலும், முனையம் அமைக்கும் பணி கடந்த 2019ல் தொடங்கி ஆமை வேகத்தில் நடைப்பெற்று வந்ததாகவும், தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.