தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக பா.ஜ.க - தி.மு.க இடையே கடுமையான வார்த்தைப் போர் அரங்கேறி வருகிறது. இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாறி மாறி தாக்கிப் பேசி வருகின்றனர். இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர் பாபு.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு இது தொடர்பாக பேசுகையில், "அண்ணாமலை கர்நாடகாவில் போலீசாக இருப்பதைப் போல நினைத்துக் கொண்டிருக்கிறார். இது கர்நாடக அல்ல. அண்ணா சாலையை பகுதியில்தான் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கற்களை ஒவ்வொன்றாக பிடுங்குவேன் என்று கூறியிருந்தார்.
அதற்கு தான் அண்ணாசாலை பக்கம் வரட்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அந்த பதிலை சொல்லி இருந்தார். தெம்பு இருந்தால், திராணி இருந்தால், தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிவாலயத்தில் உள்ள ஒரு செங்கல்லையாவது தொட்டு பார்க்கட்டும். தி.மு.க நீர் பூத்த நெருப்பாக உள்ள இயக்கம். நேற்று பெய்த மழைக்கு முளைத்த காலான் அல்ல தி.மு.க. இரும்பு முதல்வர் ஸ்டாலின் மிசாவையே சந்தித்தவர். திருமணமான கையோடு மிசாவில் சிறைக்கு சென்றவர்.
அவர் தலைமையில் லட்சோப லட்சம் தொண்டர்கள் உள்ளனர். கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் இப்படி பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை, அறிவாலயத்திற்கு இயக்கத்தில் சேர வரலாம். அவர் நட்பு பாராட்ட வரலாம். அவர் செங்கல்லை பிடுங்குவேன் என்று கூறினால் எப்படி அவரை அனுமதிக்க முடியும்?
பொன். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்தவர், ஒரு முதிர்ந்த அரசியல்வாதி. அப்பா, தாத்தா ஸ்தானத்தை அடைந்தவர். ரெட் லைட் ஏரியாவா என்று கேட்டால் அவருடைய எண்ணம் எப்படி உள்ளது என்பது தெரிகிறது. ஏற்கனவே பா.ஜ.க கோ பேக் மோடி என்பதை அனுபவித்தது. தற்போது அவர்களே அதை கையில் எடுத்துள்ளார்கள். கெட் அவுட் வார்த்தைக்கு உகந்த ஒருவர் இருக்கிறார் என்றால் அது பிரதமர் மோடி தான்" என்று அவர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.