பொன்முடியை போனில் தொடர்பு கொண்ட ஸ்டாலின்: இ.டி விசாரணையை துணிச்சலுடன் சந்திக்க அறிவுரை
அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலுடனும், சட்டரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டும் என்று அமைச்சர் பொன்முடியுடன் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வி துறை அமைச்சருமான அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகளில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 8 மணி நேர விசாரணை முடிந்து அதிகாலை சைதாப்பேட்டை இல்லத்துக்கு திரும்பினார்.
Advertisment
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன், ஐ.பெரியசாமி ஆகியோர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு வருகை தந்தனர். அங்கு சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின் துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலுடனும்,சட்டரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டும். மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மற்றும் சட்டரீதியாகவும் கழகம் துணை நிற்கும் என அமைச்சர் பொன்முடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil