தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, பொது மேடைகளில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். அவ்வகையில், கடந்த 6-ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில் பெண்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
தி.மு.க எம்.பி கனிமொழி, பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பொன்முடியை தி.மு.க துணை பொதுச் செயலாளர் பதவியில் நீக்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகிய போது விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பொன்முடி, தனது கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்க சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு விரைந்தார்.
மன்னிப்பு
இந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி, தான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.
பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.