சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று (ஜன.7,2024) தொடங்கி இரண்டு நாள்கள் நடந்த ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ இன்று (திங்கள்கிழமை) நிறைவுற்றது.
இந்த மாநாட்டில் தற்போதைய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், முன்னாள் நிதி அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.
அப்போது, “ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் மூலமாக வேலை வாய்ப்பை பெருக்க முடியும்” என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.
தொடர்ந்து, “செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பாக டீப்ஃபேக் போன்ற எதிர்மறை அச்சங்கள் குறித்தும் பழனிவேல் தியாகராஜன் எடுத்துரைத்தார்.
அப்போது, இதன் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், கணினிகளை மனிதர்களை போல் வடிவமைக்க தொடங்கிவிட்டோம்.
இக்காலக்கட்டத்தில் இந்த எ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பறிக்கவும் முடியும்” என்றார்.
மேலும் மனிதர்களால் ஏற்படும் அழிவு மற்றும் இழப்புகளை ஏ.ஐ. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சரி செய்யலாம் எனக் கூறிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “பல்வேறு நாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல்களில் முறைகேடுகள் செய்வதையும் பார்க்க முடிகிறது” என்றார்.
சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் அதிகாரப்பூர்வ பங்குநர்களாக கலந்துகொண்டனர்.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 15.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“