Advertisment

நெல் கொள்முதல் பற்றி தவறான தகவல்: ராமதாஸ் விமர்சனத்துக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி

"பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செய்யப்படும் நெல் கொள்முதல் பணி பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது சரிதானா என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Minister Sakkarapaniresponds to PMK founder Ramadoss criticism on paddy direct purchase Tamil News

"பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செய்யப்படும் நெல் கொள்முதல் பணி பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது சரிதானா என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

டெல்டா அல்லாத மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்கள் தவிர, தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்திற்கு  ஒருசில இடங்களில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தான் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நெல் கொள்முதல் செய்கிறது. 2 இடங்களிலும் ஒரே விலை தான்" என்று நெல் கொள்முதலில் தமிழகத்தின் உரிமையை தாரை வார்க்கக்கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி கொடுத்துள்ளார். 

Advertisment

இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1.10.2002 முதல் ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்து அதனை அரிசியாக மாற்றம் செய்து மத்திய தொகுப்பில் ஈடுசெய்து, பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் தான் நெல் கொள்முதல் திட்டம் முதலில் செயல்படுத்தப்பட்டது. டெல்டா அல்லாத மாவட்டங்களின் நெல் விவசாயிகளின் நலன் கருதி டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் பணி விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் விளையும் நெல் மணிகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது.

டெல்டா அல்லாத மாவட்டங்களில் 2007-2008 கொள்முதல் பருவத்திலிருந்து கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் நெல் கொள்முதல் செய்ய மாநில அரசால் அனுமதி வழங்கப்பட்டது. 1.3.2012 அன்று ஒன்றிய அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்தின் (NCCF) மேலாண்மை இயக்குநரின் 4.4.2013 நாளிட்ட கடிதத்தின் அடிப்படையிலும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் மேற்கொள்ள 14.2.2014 அன்று தமிழ்நாடு அரசாணை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தேவையைக் கருதி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது.

Advertisment
Advertisement

முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடுவதை முறைப்படுத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இரண்டு விவசாயிகள், வேளாண்மை இணை இயக்குநர். கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல / மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு தேவையான இடங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் நிலையம் திறந்திட அனுமதி வழங்கி வருகிறது.

இதனடிப்படையில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் தவிர தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்திற்கு அதன் கோரிக்கையைப் பரிசீலனை செய்து ஒருசில இடங்களில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தான் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நெல் கொள்முதல் செய்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நடத்தும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஒரே விலையில் தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையும் அவ்வாறே வழங்கப்படுகிறது.

தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நெல் கொள்முதல் செய்வது பற்றி நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது நடந்த விவாதத்திலும் தெரிவித்துள்ளேன். ஆனால் இதை ஏதும் அறியாமல் அல்லது அறிந்தும் அறியாமல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செய்யப்படும் நெல் கொள்முதல் பணி பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது சரிதானா என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதித்தான் எந்த முடிவையும் எடுக்கும் என்பதை அவருக்கும் மற்றவர்களுக்கும் இதன்மூலம் மீண்டும் தெளிவு படுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment