சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டு மைதானம், சிறுவர் விளையாட்டுத்திடல், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பூங்காவின் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளிடம் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் இதில் கூடுதலாக மின்விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வசதி குறித்து சில பரிந்துரைகளையும் அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அத்துடன் அங்கு குளத்தில் மலர்ந்திருந்த பூக்களை பார்த்து, குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது என கிண்டலாக தெரிவித்தார். இந்த ஆய்வின் போது காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தி: சக்தி சரவணன், சென்னை.