/indian-express-tamil/media/media_files/2025/06/18/tn-minister-sekar-babu-on-tiruchendur-murugan-temple-kudamulukku-thiruvizha-in-tamil-2025-06-18-19-46-17.jpg)
'எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது முதல்வரின் கொள்கை. யாரும் சொல்லிதான் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றில்லை' என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற ஜூலை 7 ஆம் தேதி (திங்கள்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கின்போது தமிழில் வேதங்கள் ஓதப்படும் என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் குடமுழுக்கு நேரம் குறித்தும் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான கோயில் நிர்வாகம் அறிக்கையில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 07.07.2025 அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. நன்னீராட்டு பெருவிழாவிற்கு 8,000 சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
வேள்விச்சாலை வழிபாடு நாள்களில் வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். மேலும், காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேகர் பாபு பேட்டி
இதனிடையே, திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது முதல்வரின் கொள்கை. யாரும் சொல்லிதான் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றில்லை. பழனி, மருதமலை கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதேபோல், திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும். தமிழில் குடமுழுக்கு என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று' என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.