கோவை சிட்ரா பகுதியில் உள்ள சிறப்பு மையம் (Center of Excellence) கட்டடத்தில் தொழில்நுட்ப ஜவுளி தொழில் முனைவோருக்கான 5 நாள் பயிற்சி நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி பேசுகையில், "தொழில்நுட்ப ஜவுளி தொழில் முனைவோருக்கான 5 நாள் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இன்று கரூர் மற்றும் திருப்பூரில் சிறிய டெக்ஸ்டைல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஜவுளி துறையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதை முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.
மில்களில் இயந்திரங்கள் வாங்கும்போது, முன்பெல்லாம் 2 சதவிகிதம் சப்சடி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முதலமைச்சர் அதனை 6 சதவிகிதமாக்கி இருக்கிறார். அதேபோல இந்திய பருத்தி கழகத்திற்கு வாங்கும் பருத்திக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா குடோனுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்திலேயே குடோன் அமைத்து கிடைக்கும்படி செய்து காட்டன் கண்ட்ரோல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜவுளி கொள்கை 10 நாட்களுக்குள் நிச்சயம் அறிவிக்கப்படும்.
சோமனூர் உள்ளிட்ட பகுதியில் விசைத்தறி கூடங்களின் உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு, அதன் கருவிகளை அகற்றி வருவதைப் பொறுத்தவரை, அரசு தரப்பு சொசைட்டிகளில் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து வருகிறோம். ஆனால், தனியார் அமைப்பினர்தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கைத்தறியில் அரசு சார்ந்த தொழிலுக்கு வருடத்திற்கு 10% உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் விசைத்தறிக்கூடங்கள் அவர்களுக்கு ஏற்றதை அவர்கள்தான் நிர்ணயம் செய்து கொள்கிறார்கள். தொழிலாளர் நலதுறையினர் தான் அதில் தலையிட முடியும். கடந்த வாரம் கூட திருவள்ளூரில் உள்ள விசைத்தறியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதேபோல தற்போதைய பட்ஜெட்டிலும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
செந்தில்பாலாஜி பேச்சு
தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, "மின் கட்டணம் உயர்வால் பவர்லூம்புகள் உடைக்கப்படுகிறது என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. கருமத்தம்பட்டியில் பவர்லூம் வைத்திருப்பவர்கள் தான் முதல்வருக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தினார்கள். மின் கட்டணம் என்பது பவர்லூம்ப் காரர்களுக்கு ஆயிரம் யூனிட்டுக்கு மின்சாரம் இலவசம். 70% பேருக்கு கட்டணமே வராது. விசைத்தறிவு உரிமையாளர்களே ஆயிரம் யூனிட் இலவசமாக தான் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.
மின் கட்டணம் தொடர்பாக அவர்கள் ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். கடந்த நான்கு வருடங்களில் 52 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் மின்சார வாரியத்திற்கு முதல்வர் வழங்கி இருக்கிறார். இவ்வளவு நிதி கொடுக்கவில்லை என்றால் இந்நேரம் மின்சார வாரியம் மூடப்பட்டு இருக்கும். கைத்தறிக்கு 300 யூனிட் வரை இலவசம் மின்சாரமும், விசைத்தறிவுக்கு ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரமும் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்படுவதற்கு மறு டெண்டர் விரைவில் விடப்போகிறோம்" என்று அவர் கூறினார்.