காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் 1,200 தொழிலாளர்கள் கடந்த 9 ஆம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
கைது
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சாம்சங் நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொழிலாளர்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட வந்த சூழலில், அந்த பந்தல் இரவோடு இரவாக போலீசாரல் அகற்றப்பட்டுள்ளது. மேலும், சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்நிலையில், பந்தல் அகற்றப்பட்டாலும் அதே இடத்தில் அமர்ந்து கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 5-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் சொந்த பிணையில் ஊழியர்களை போலீசார் உடனடியாக விடுவித்தனர்.
விளக்கம்
இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற அந்நிறுவனம் முன்வந்துள்ளது. மாத ஊதியத்துடன் ஊக்கத்தொகை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகளை சாம்சங் ஏற்றுள்ளது. சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது. இவ்விவகாரத்தில் சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
நீதிமன்றத்தில் உள்ள இவ்விவகாரத்தில், நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும். தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.
அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும்போல காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதே போலதான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை.
தொழிலாளர்களின் நலனும் முக்கியம்; இளைஞர்களின் வேலைவாய்ப்பு அரசுக்கு முக்கியம். போராடும் தொழிலாளர்களை விரோதமாக பார்க்கவில்லை; அடக்குமுறை நடக்கவில்லை. போராட்டத்தை அரசியலாக பார்க்கவில்லை. சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அரசு தயாராக உள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“