கஜ புயல் நிவாரண நிதி தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி சந்தித்து பேசினார்கள்.
தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக நிலுவையில் உள்ள மானிய தொகையை வழங்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் வேலுமணி மற்றும் அமைச்சர் தங்கமணி கோரிக்கை மனுவை வழங்கினர்.
அமைச்சர் வேலுமணி மற்றும் தங்கமணி டெல்லி பயணம்
அதிமுக மூத்த அமைச்சர்களாகிய வேலுமணி மற்றும் தங்கமணி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்தனர். இவர்கள் இருவரும் நிர்மலா சீதாராமனை சந்தித்து கஜ புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கஜ புயலில் விவசாய பயிர்கள் அதிகளவில் சேதமடைந்ததால் கூடுதல் நிதி கேட்டுள்ளனர். அதற்கு தேவையான நிதியை பெற்று தருமாறு மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரானம் தேவையான நிதி பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால், இந்த சந்திப்பு அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசுவதற்காகவே நடந்தது என்றும், இக்கூட்டணி குறித்து அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனிடம் பேசியதாகவும் சிலர் கூறி வந்தனர். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.
அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி, “கூட்டணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீசெல்வமும் தான் முடிவெடுப்பார்கள். நாங்கள் மத்திய அமைச்சர் சந்தித்தது நிதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக மட்டுமே” எனத் தெரிவித்தார்.