தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 1 ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் உள்ள பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுடபத்தை அறிமுகப்படுத்த வேண்டும். மாநில பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மோசமாக உள்ளது. நான் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசினேன். அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் பற்றியான அறிவுத்திறன் குறைவாக உள்ளது." என்று கூறியிருந்தார்.
இதேபோல், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘எண்ணி துணிக’ நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார்.
துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது.
அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக்கூட படிக்க முடியவில்லை. ஒரு ஆய்வு இதனை தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது." என்று கூறியிருந்தார்.
பதிலடி
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு பள்ளியில் பயின்ற பலர் சிலிக்கான் வேலியில் உயர் பதவியில் உள்ளனர் என்றும், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் தமிழ் நாட்டில் படித்தவர்கள்தான் என்றும், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் வயிற்றெரிச்சல் பிடித்துக் கொண்டு நமது பாடத்திட்டத்தை குறை கூறி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னை வண்டலூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டுகிற கல்வி முறைதான் சிறந்த கல்வி முறை. அந்தவகையில் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டு கல்வி முறைதான் மாணவர்களை சிந்திக்க வைக்கின்ற, எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் கல்வி முறையாக அமைந்துள்ளது.
இன்றைக்கு சிலர் நமது தமிழக அரசின் பாடத் திட்டம் சரியில்லை என புரளியை கிளப்பிவிட்டுள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வீர முத்துவேல் போன்றோரும், அரசு பள்ளியில் பயின்ற மேலும் பலரும் ஐ.டி துறைகளில் உயர்பதவியில் உள்ளனர்.
தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், ஐ.ஐ.டி, எம்ஐடி போன்ற உயர் கல்வி நிலையங்களில் படித்து வருகின்றனர். பாடத்திட்டத்தை குறை கூறுவது நம்முடைய ஆசிரியர்களை, மாணவர்களை குறை கூறுவதற்கு சமம். இதற்கு எந்த விதத்திலும் திராவிட அரசும், நமது முதல்வரும் இடம் கொடுக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே சிறந்த கல்வி திட்டம் தமிழக கல்வி திட்டம்தான்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் படித்தவர்கள்தான். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் வயிற்றெரிச்சல் பிடித்துக் கொண்டு, நமது பாடத்திட்டத்தை குறை கூறி வருகின்றனர்” என்றும் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“