தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க மதுரைக்கு வந்துள்ளார். இன்று மதுரை ஒத்தக்கடையில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான சுழல் நிதி கடன் உதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'திட்டங்களை மக்கள் தேடிச் செல்லும் காலம் போய், மக்களை தேடிச் திட்டங்கள் செல்கின்றன' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் அமருமிடம், காத்திருப்பு அறை, கழிவறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பொதுமக்கள் தெரிவித்த குறைகளைக் கேட்டு, அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பொதுவாக எந்த மாவட்டத்திற்க்கு சென்றாலும் அங்கு ஆய்வு செய்வது வழக்கம் . அதன் அடிப்படையில் இங்கும் ஆய்வு செய்தாக தெரிவித்தார்.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“