Advertisment

'என் ஆசிரியரை அவமானப்படுத்திய அந்த நபரை சும்மா விடமாட்டேன்': அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்

'என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய அந்நபரை சும்மா விடமாட்டோம்' என்று ஆவேசமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
 TN Minster Anbil Mahesh Poyyamozhi on Spirituality lecture in Chennai Govt school controversy Tamil News

"4 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியரா? உயரதிகாரிகளா? யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக அப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய அந்நபரை சும்மா விடமாட்டோம்' என்று ஆவேசமாக கூறியுள்ளார். 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "அசோக் நகர் அரசுப் பள்ளி பல சாதனைகளை முன்னெடுத்த பள்ளி, இங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது வேதனைக்குரியது, கண்டிக்கக்கூடியது. ஒவ்வொரு மாதமும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. பள்ளி நிகழ்ச்சிகளுக்கு அறிவு சார்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். பள்ளிக்கு யாரை அழைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டும். ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச புரிதல் வேண்டும்; இதை வேண்டுகோளாகவும் வைக்கிறேன் எச்சரிக்கையாகவும் சொல்கிறேன்.

4 நாட்களுக்குள் விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியரா? உயரதிகாரிகளா? யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதல்-அமைச்சருக்கும், பள்ளிகல்வித்துறைக்கும் உள்ளது.

என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிற்போக்கு பேச்சை எதிர்த்து தமிழ் ஆசிரியர் சங்கர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான விசிட்டர்கள் என்னை பார்க்கின்றனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அதற்காக நான் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளேன் என்பது தவறான செய்தி

எவ்விதத்திலும் கொள்கையில் சமரசம் என்பது இல்லை. புதிய கல்விக்கொள்கையை கூட நாங்கள் அதற்காக ஏற்கவில்லை. தன்னம்பிக்கை பேச்சாளரை மாணவர்களிடம் பேச வைக்கும் ஆசிரியர்களின் முயற்சியில் தவறு இல்லை. ஆனால், அவர்களின் பின்னணியை சோதிக்காமல், என்ன மாதிரி பேசப்போகிறார் என்பதை தெரிந்தே அழைத்து வந்திருக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. நல்ல மதிப்பெண் பெறுவது புத்திசாலித்தனம் இல்லை, பகுத்தறிந்து செயல்படுவதே புத்திசாலித்தனம். பிற்போக்கு சிந்தனை உடைய கருத்துக்களை யாராவது கூறினால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும். பகுத்தறிவை விதைக்கும் இடம் பள்ளி.

விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை விவகாரத்தில், சுற்றுச்சூழல் இணை செயலாளர் கொடுத்த சுற்றறிக்கை மூலமாக மாவட்ட ஆட்சியரும் அதன் அடிப்படையில் சி.இ.ஓ பள்ளிகளுக்கு அனுப்பி இருக்கின்றார். இது குறித்து தலைமைச் செயலரிடம் அறிவுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்கச் சொல்லி இருக்கின்றேன். இது விநாயகர் சிலையை கரைக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டிய சுற்றறிக்கை, அதை ஏன் பள்ளிகளுக்கு கொடுத்தார்கள் என்பது குறித்து கேட்டுள்ளேன்." என்று அவர் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Anbil Mahesh School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment