Tamil Nadu News: தமிழ்நாட்டில் பண்டிகை காலம் நெருங்க நெருங்க வணிகர்கள் வழங்கக்கூடிய சேவைகளின் விலையும் அதிகரித்து வருவது வழக்கம். இதில் பண்டிகை காலத்தில் வேலைக்காக சொந்த ஊர்களில் இருந்து நகரங்களில் வசிக்கும் மக்கள் தனது சொந்த ஊரிற்கே பயணிப்பது பல மடங்காக அதிகரிக்கும்.
இவர்கள் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, அரசின் தொடர் விடுமுறைகள் போன்ற காலங்களில் பயணிக்க ஆரவாரத்துடன் காத்திருப்பர். இவர்களுக்காக அரசே சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் வைத்தாலும், போக்குவரத்து நெரிசல் அளவிடமுடியாத அளவிற்கு உருவாகும்.
இப்படி ஒரு நிலை உருவாகும் வேளையில், இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக ஆம்னி பேருந்துகள் பயன்படுத்தி தனது கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.
வரும் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தற்போது ஊர்களுக்கு பயணிப்பதற்காக கட்ட முன்பதிவு நடந்து வருகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு மேற்கொள்ள உரிய கட்டணம் செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டிகை காலம் என்பதால், சென்னையில் இருந்து மதுரைக்கு ஏசி படுக்கை வசதியுடன் கிடைக்கும் பேருந்துகளின் கட்டணம் ரூ.1,170 ரூ.2,000 வரை அதிகரித்துள்ளது, ஏசி அமரும் இருக்கைக்கு ரூ.870 - ரூ.1,490 வரை வசூலிக்கப்படுகிறது. சாதாரண படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் கட்டணம் ரூ.930 முதல் ரூ.1,580 வரை, சாதாரண அமரும் இருக்கைக்கு ரூ.690 முதல் ரூ.1,170 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவே சாதாரண நாட்களில் ஏசி படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.900யும், ஏசி அமரும் இருக்கைக்கு ரூ.500யும், சாதாரண படுக்கை வசதிகொண்ட பேருந்திற்கு ரூ.650யும், சாதாரண அமரும் இருக்கைக்கு ரூ.400யும் வசூலிக்கப்படுகிறது.
மேலும், பண்டிகை காலத்தில், சென்னையிலிருந்து கோவைக்கு ஏசி படுக்கை வசதிகொண்ட பேருந்திற்கு ரூ.1,190 முதல் ரூ.2,030 வரையும், ஏசி அமரும் இருக்கைக்கு ரூ.940 முதல் ரூ.1,600 வரையும், சாதாரண படுக்கை இருக்கைக்கு ரூ.990 முதல் ரூ.1,690 வரையும், சாதாரண அமரும் இருக்கைக்கு ரூ.720 முதல் ரூ.1,240 வரையும் கட்டணத்தை விலை அதிகரித்துள்ளது.
இதுவே சாதாரண நாட்களில், ஏசி படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.900யும், ஏசி அமரும் இருக்கைக்கு ரூ.650யும், சாதாரண படுக்கை வசதிகொண்ட பேருந்திற்கு ரூ.690யும் மற்றும் சாதாரண அமரும் இருக்கைக்கு ரூ.550 வரையும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
போக்குவரத்து வசதியை பெருமளவில் எதிர்பார்க்கும் வேளையில், ஆம்னி பேருந்துகளின் மூன்று மடங்கு கட்டண உயர்வு வைப்பது மக்களை கவலையில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் வரும் புகார்களை விட இந்த ஆண்டு அதிகமாகவே மக்கள் புகார் விடுத்துள்ளனர்.
இதைத்தெரிந்துகொண்ட தமிழக அரசு, ஆம்னி பேருந்துகளை விசாரணையில் ஈடுபடுத்த பல்வேறு குழுக்கள் நியமித்து வருகிறார்கள். ஆனால், இவை போன்ற பிரச்சனைகள் ஆண்டுதோறும் தவறாமல் வருகிறது என்று மக்கள் வருத்தமளிக்கின்றனர்.
இவ்வளவு தான் கட்டணம் என்று தமிழக அரசு நிர்ணயித்து அறிவிக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.