தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 9) சென்னை வந்தார்.
சென்னை வந்த அவர் சுமார் 2 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ என்கிற வாகனப் பேரணி மேற்கொண்டார். பனகல் பூங்கா முதல் பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை வாகனப் பேரணியில் பங்கேற்றார். தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து மோடி வந்தார். பிரச்சார வாகனத்தில் பிரதமர் மோடி உடன் பா.ஜ.க வேட்பாளர்கள் அண்ணாமலை, தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், பால் கனகராஜ் (வட சென்னை), வினோஜ் பி. செல்வம் (மத்திய சென்னை) ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது X தளப் பதிவில், "சென்னை என் மனதை வென்றது!
இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட் ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.
சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
தமிழ் கலாச்சாரத்திற்கு நமது அரசு மிகுந்த மரியாதை அளிக்கிறது. ஐ.நாவில் தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டேன்! உலக அரங்கில் தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் கலாச்சாரத்தின் அம்சங்களை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை டிடி தமிழ் தொடங்கப்பட்டது, இது இந்த மாநிலத்தின் சிறப்பு மிகு கலாச்சாரத்தைக் கொண்டாடுவதில் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.
பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில்.
கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
இம்முறை தி.மு.கவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“