Tamilnadu news in tamil: தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த ஆர்.எஸ்.எஸ்
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28-ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவிட்டனர். அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டனர்.
இந்த மனு விசாரணையின் போது, காவல் துறை தரப்பில், "ஆர்எஸ்எஸ் அமைப்பினர் குறிப்பிட்ட ஓர் இடம் என்று குறிப்பிடாமல், மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பதால், காவல்துறை தரப்பில் முடிவெடுக்க தாமதமாகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
ரிட் மனு தாக்கல் செய்த திருமாவளவன்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த உத்தரவை திரும்ப பெற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக எந்த ரிட் மனுவோ அல்லது மேல்முறையீடு செய்யவோ முடியாது. மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை மட்டுமே அணுக முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நோட்டீஸ் அனுப்பிய ஆர்எஸ்எஸ்
முன்னதாக, அக்டோபர் 2-ம் தேதி அன்று ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய மனுவை நிராகரித்த திருவள்ளூர் காவல்துறை மீது உள்துறை செயலர் உள்ளிட்ட மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ் அனுப்பியது.
நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவர்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு, மாநில உள்துறைச் செயலர் ஃபனிந்திர ரெட்டி, டிஜிபி சி சைலேந்திர பாபு, உள்ளூர் எஸ்பி மற்றும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸை அனுப்பி இருந்தது ஆர்எஸ்எஸ்.
ஆர்எஸ்எஸ் வழக்கறிஞர் பிரபு மனோகர் அனுப்பிய அந்த நோட்டீஸில், "நீதிபதி ஜி கே இளந்திரையனின் செப்டம்பர் 22 தேதியிட்ட உத்தரவைக் கருத்தில் கொண்டு, உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளைத் தவிர அனுமதி மறுக்கவோ அல்லது புதிய நிபந்தனைகளை விதிக்கவோ நால்வருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.
எனவே, போதிய பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமையாகும். வேறுவிதமாக செயல்படாமல், பணியை வெற்றிகரமாக முடிக்க உதவுகிறது. இன்ஸ்பெக்டர் (திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) நிராகரிப்பு உத்தரவு, சட்ட விரோதமானது மற்றும் அவமதிப்புக்குரியது. மூவரும் உயர் நீதிமன்றத்தின் முன் தரப்பினர் மற்றும் உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய கடமைப்பட்டவர்கள், தவறினால் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும்" என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
நிராகரிப்பு உத்தரவை "நிபந்தனையின்றி" திரும்பப் பெறவும், ஊர்வலம் மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதி பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கவும் மனோகர் நான்கு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுதித்திருந்தார்.
எந்தவொரு தோல்வியும், செப்டம்பர் 22 ஆம் தேதி உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்காக உயர் நீதிமன்றத்தின் முன் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும் அவர் எச்சரித்து இருந்தார்.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் தடை
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அன்றைய நாள் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், அக்டோபர் 2-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்த சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் தமிழக காவல்துறை அனுமதி மறுப்பு என்று கூறியுள்ளது.
அக்டோபர் 2-ம் தேதி வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கோரியதால் சட்டம் ஒழுங்கு கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை எதிர்த்து ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.