scorecardresearch

பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்… வேண்டுகோள் விடுத்த காவல்துறை… அண்ணாமலை பதில் என்ன?

வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களை கூறி விசாரணையை திசைதிருப்ப பார்க்கிறார்.

Police Annamalai
TN BJP Leader K Anna Malai

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே விசாரணையை திசை திருப்பும் வகையில் கருத்துக்களை தெரிவத்து வருவதாக தமிழக பா.ஜ.க தலைவருக்கு தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் கொங்கு மண்டலமான கோவையில் கடந்த 23-ந் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்தக்குள்ளானதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் கோவையில் மட்டுமல்லாது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தகவல் வெளியானது. இது தொடர்பாக தமிழக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு துறைக்கு மாற்ற தமிழக முதல்வர் பரிந்துறை செய்திருந்தார். இதனை ஏற்று மத்திய அரசும் தேசிய புலனாய்வு துறைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது என்.ஐ.ஏ வழக்கை விசாரித்து வருகிறது.

இதனிடையே கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதல் தான் இனியும் தமிழகம் மூடி மறைக்க முடியாது என்றும்,  போலீசார் யாரை காப்பாற்றுவதற்காக மூடி மறைக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். என்.ஐ.ஏ.விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளேன் என்று கூறியிருந்தார்.

இதனிடையே அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு காவல்துறை குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களை கூறி விசாரணையை திசைதிருப்ப பார்க்கிறார். அதேபோல் இந்த வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு தாமதமாக அனுப்பியதாக கூறுகிறார்.

இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தவுடன் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்குவது உள்ளூர் காவல்துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த சட்டம்தான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு சேர்க்கப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டம் 2008-ல குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டாலோ தேசிய புலனாய்வு முகமை சட்டப்பிரிவு 6-ன் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்நிலைய அதிகாரி மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கை அளிக்க வேண்டும்.

அறிக்கை பெற்றவுடன் மாநில அரசு உடனடியாக ஒன்றிய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையை பெற்ற ஒன்றிய அரசு 15 நாட்களுக்குள் வழக்கின் தன்மைக்கேற்ப தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம். ஆனால் நடைமுறையில், ஒன்றிய அரசு தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்து பெற்று விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை வழக்கு பதிவு செய்த காவல்நிலைய அதிகாரியே மேற்கொள்வார்.

இதில் எங்கே  தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துத்துக்கூட  வழக்குகள்  என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டன, அதுவும் சில வழக்குகளில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது  திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புதுடில்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே  எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது. ஏனென்றால், அவர் குறிப்பிடுவது புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட  பொதுவான சுற்றறிக்கை ஆகும். 

இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப்போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாக பழி சுமத்தி  ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. 18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21 ஆம் தேதி  பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
 
இவர் சொல்வது போல் கோவையில் இந்த சம்பவம் சில  குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருத்தால்  தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து, வீடுகளை சோதனையிட்டு வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும். எனவே, இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காவல்துறை அறிவிப்பு குறித்து தனது அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே. ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர் என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn police request to tn bjp head annamalai for dont say fake news about kovai issue

Best of Express