மதுரை மேலூர் அருகேயுள்ள அமைந்துள்ள கிராமம் அரிட்டாப்பட்டி.பா இந்த கிராமத்தை பாரம்பரிய உயிர்ப்பன்மயம் வாய்ந்த பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்தியஅரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம், கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 4-வது ஏலத்தில் ஸ்டெர்லைட் வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்கும் உரிமத்தைப் பெற்றுள்ளது.
இதன்படி, ஆந்திரா மாநிலம் பாலே பாளையம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தெற்கு தெரு, முத்துவேல்பட்டி, மீனாட்சி புரம், நடுவளவு, தெற்கு வளவு, சண்முகநாதபுரம், அ.வல்லாளப்பட்டி, கூலானிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டி மங்கலம், செட்டியார் பட்டி, நாயக்கர் பட்டி போன்ற கிராமங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், சுற்றுசூழல் அனுமதி கேட்டு மாநில அரசிடம் அந்த நிறுவனம் விண்ணப்பித்தால் தமிழ்நாடு அரசு தாமதமின்றி நிராகரிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப்பகுதிகளில் ஒன்றான அரிட்டாபட்டியை சீரழிக்கும் வகையிலான இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சு.வெங்கடேஷ் எம்.பி கண்டனம்
இது தொடர்பாக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷ் தனது எக்ஸ் தளத்தில்,
கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய அரசு, அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருவதாக? அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இது தமிழகத்தின் வளங்கள், வரலாற்றை ஒருசேர அழிக்கும் முயற்சி,”எனவும், தமிழகத்தின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலை இச்சுரங்கத் தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது.
பெருங்கற்காலத்தைச் சேர்ந்த அமைவுகள், 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக் கோயில்கள் என தமிழக வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களைத் தாங்கி நிற்கும் இடம்,” என்று அவர் கூறியுள்ளார்.
அன்புமணி கண்டனம்
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாசும் தனது கண்டன அறிக்கையில், "தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப்பகுதிகளில் ஒன்றான அரிட்டாபட்டியை சீரழிக்கும் வகையிலான டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதை ஏற்க இயலாது" என்று கூறினார்.
ஜவாஹிருல்லா கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் வழங்கிய உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் இசைவாணையும் வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சூழல் முக்கியத்துவம் மற்றும் தமிழர் வரலாற்றைச் சுமந்து நிற்கும் அரிட்டாபட்டியை அழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் முயற்சியைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாகத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறினார்.
சீமான் கண்டனம்
"மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன், கூடங்குளம் அணுவுலை, நியூட்ரினோ, கெயில் எரிகுழாய், சாகர்மாலா, முதுமலை வனப்பகுதியில் கண்ணாடி ஒளியிழை வடங்களைப் (Fibre Optical Cable) பதிக்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி, தமிழ்நாட்டின் கடற்கரைகளில் துறைமுகங்கள் கட்ட அதானி நிறுவனத்திற்கு அனுமதி என்று, இந்திய ஒன்றியத்தை ஆண்ட காங்கிரஸ் மற்றும் ஆள்கிற பாஜக அரசுகள் தமிழ்நாட்டின் மீது தொடர்ச்சியாக நாசக்கார திட்டங்களைத் திணித்து, மக்கள் வாழமுடியாத மாநிலமாக தமிழர் நிலத்தை மாற்றி வருகிறது." என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
விளக்கம்
இதனிடையே, வனத்துறை அமைச்சர் பொன்முடி, "அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பம் ஏதும் வரவில்லை. அப்படி விண்ணப்பித்தாலும் அதனை தமிழக அரசு நிராகரிக்கும்" என்று கூறி விளக்கமளித்தார்.
இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“