சட்டப் பேரவைத் தேர்தலில் புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, ஓட்டுப் போடுவது போன்ற பங்களிப்பு இருக்கும் என்று மு.க. அழகிரி தெரிவித்தார்.
கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோது, மறைந்த திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி பாஜகவில் இணைய இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
ஆனால், இத்தகைய செய்திகள் முற்றிலும் வதந்தி என்று அழகிரி தெரிவித்தார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் என்பதை உறுதி செய்த அவர் புதிதாக கட்சி துவங்குவது பற்றி தொண்டர்களின் கருத்தை கேட்டு முடிவு எடுக்க இருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், மதுரை அருகே அழகர் கோவிலில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்று கேள்விக்கு பதிலளித்த அவர், வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம். அவர் புதிய படத்தில் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என்று கூறினார்.
மேலும், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாகவே அறிவித்தவுடனேயே அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன் என்று தெரிவித்தார்.
அழகிரி மீண்டும் திமுகவில் இணைய இருப்பதாகவும், தன்னுடைய மகன் தயாநிதிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்ற கருத்தும் பரவலாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக 2014 ல் திமுக-விலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.