தமிழகம் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தார். அப்போது மறைந்த திமுக தலைவர் கலைஞரின் மகன் மற்றும் முன்னாள் அமைச்சருமான முக அழகிரி பாஜகவில் இணைவார் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகின.
ஆனால் பாஜகவில் தான் இணைய இருப்பதாக வந்த செய்திகள் வதந்தியே என்று கூறியுள்ளார் அழகிரி. மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் என்பதை உறுதி செய்த அவர் புதிதாக கட்சி துவங்குவது பற்றி தொண்டர்களின் கருத்தை கேட்டு முடிவு எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மதுரை மாநகர் திமுக பொறுப்புக்குழு எஸ்.ஆர். கோபியின் சகோதரர் நல்லமருது கடந்த வாரம் உயிரிழந்தார். அவருடைய வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்ற மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மீண்டும் திமுகவில் இணைவீர்களா என்றும், தன்னுடைய மகன் அக்கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுமா என்று கேட்ட போது ஆதரவாளர்களுடன் பேசியே முடிவு எட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற இருந்த ஆலோசனை குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் பதில் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil