ஸ்டெர்லைட் விரிவாக்கம்: சிப்காட்டுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்குச் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கிய சிப்காட்டிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்குச் சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரை தொடர்ந்து, சிப்காட்டிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் காப்பர் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுத்தன்மை கொண்ட புகை மற்றும் கசிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலையில் இருந்து கசியும் மாசுவினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு மற்றும் விரிவாக்கத்திற்காகத் தற்காலிகமாக ஆலையை மூடியுள்ளது அந்நிர்வாகம். இந்நிலையில், ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்குச் சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி சிப்காட் நிறுவனம் விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்துள்ளது. சிப்காட் 2 என்ற புதிய தொழிற்பூங்கா செயல்பட அரசு இன்னும் அனுமதி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக எப்படி நிலம் ஒதுக்கப்பட்டது.
சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட நிலத்தில் எப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை தொடங்கியது என்ற கேள்விகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எழுப்பியுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குநர் விளக்கம் அளிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது.

தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கிய தகவல் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலைத் தொடர்ந்து, மக்கள் தங்களின் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close