தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிரான 100வது நாள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதனால் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தில் அமைதியான சூழல் பாதிக்கப்பட்டது. எனவே இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக முன்னதாக அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்திருக்கிறது. வீராங்கனை அமைப்பின் பொறுப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தவருமான பேராசிரியை பாத்திமா பாபு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு-11 பேர் பலி தொடர்பாக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த வாரியம் தமிழக அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, இன்று காலை 5 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பைத் துண்டித்தது. இந்த அதிரடி நடவடிக்கையால் ஆலையின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பால் எந்த உற்பத்தியும் நடைபெறாமல் இருக்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.