தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரியில் தினமும் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று (ஜூலை 22) சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஜூலை 22ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 23 முதல் 27 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி. தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதோடு, நீலகிரியில் தொடர் மழை பெய்து வருவதால் 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அறிவிப்பு.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று 22.07.2024 நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தில் மாணவ மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“