/tamil-ie/media/media_files/uploads/2017/12/banwarilal-purohit.jpg)
Cauvery Management Board, MK Stalin, All Party Leaders Met TN Governor
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பெயரை குறிப்பிட்டு நக்கீரன் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்று வெளியானது.
நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 4 முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றதாகவும், ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலுக்கு கல்லூரி மாணவிகள் பலரை அறிமுகம் செய்ததாகவும், பன்வாரிலால் மதுரை வரும்போதெல்லாம் அவரை சந்தித்து பேசியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 9ம் தேதி நக்கீரன் பத்திரிக்கை தலைமை ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது.
ஆளுநர் மாளிகை அறிக்கை :
நக்கீரன் இதழில் வெளியான குற்றச்சாட்டுகள் ஆளுநரின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் விருந்தினர் விடுதியில் ஆளுநர் தங்கவும் இல்லை. அங்கே அவர் நிர்மலா தேவியை சந்திக்கவும் இல்லை.
நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்களிலும் உண்மை இல்லை. ஆளுநரையோ, செயலாளரையோ, அதிகாரிகளையோ நிர்மலா தேவி சந்திக்கவே இல்லை.
குறிப்பாக, கடந்த ஒராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை. நிர்மலா தேவி மீதான புகாரில் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. அடிப்படை ஆதரமற்ற புகார்களை கூறியதால், நக்கீரன் கோபால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உண்மை தெரியாமல் நக்கீரன் வந்த செய்திகளை சிலர் ஆதரிக்கின்றனர். நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்துக்கொள்ள முடியாது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.