Former Chief Election Commissioner TN Seshan: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் சென்னையில் காலமாகியிருக்கிறார். அவருக்கு வயது 86.
ஐ.பி.எஸ் தேர்வை 1953-ஆம் ஆண்டும், ஐ.ஏ.எஸ். தேர்வை 1954-ஆம் ஆண்டும் எழுதி வெற்றி பெற்றார் திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். 1990 முதல் 1996 வரை 10-வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த இவர், மத்திய அமைச்சரவை செயலாளராகவும் பணி புரிந்துள்ளார். அதோடு, தான் பயின்ற, சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார்.
சேஷனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ”டி.என். சேஷன் மிக சிறந்த நிர்வாக அதிகாரி என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அவர் மேற்கொண்ட தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் ஜனநாயகம் வலுப்பெற்று உள்ளதாக தெரிவித்துள்ளார். டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை வழிகாட்டும் விளக்காக திகழும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, குறிப்பிட்டுள்ளார்.
“ஜனநாயகத்துக்காக டி.என் சேஷன் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவு கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி உள்ளிட்ட பலரும் டி.என்.சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.