செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆம்னி பேருந்து நிறுவனத்தின் தரகர்கள், பயணிகளை தங்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் புகாரளித்ததாக தெரிகிறது.
பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனம், இன்று ஒன்றாவது நடைமேடை அருகே இருக்கும் பயணிகள் செல்லும் வழியை பூட்டியதாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கூறுகின்றனர். மேலும், பேட்டரி வாகன ஓட்டுநர்களும் பயணிகளை நேரடியாக ஆம்னி பேருந்துகள் இயங்கும் நடைமேடைக்கு அழைத்துச் செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், அரசு பேருந்தை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 30 பயணிகள் இருந்தால் மட்டுமே, பேருந்தை இயக்க முடியும் என்பதால் தாமதம் ஏற்படுவதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
இதனைக் கண்டித்து இன்று அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“