tn ssl public exam : ஜூன் 15-ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை அனுமதிக்க முடியாது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
10 வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் வரும் ஜூன்15 ம் தேதி முதல் நடத்தப்பட இருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
ஊரடங்கில் பொதுப் போக்குவரத்துக்கு இன்னும் தளர்வுக்கு அளிக்கப்படாத நிலையில் தேர்வு மையம் வருவதற்கான உரிய போக்குவரத்து வசதி செய்யாத நிலையில் தேர்வு நடத்தப்பட கூடாது என்றும் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தினால் மாணவர், ஆசிரியர் என இரு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் 10 ம் வகுப்பிற்கான தேதியை தள்ளி வைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் பொதுநல வழக்கிற்கான மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது. மனுதரார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஏற்கனவே மே 20ஆம் தேதி அறிவித்த போது ஜூன் 15 முதல் தேர்வை நடத்துவது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டது என்றார். தற்போது கொரோனா பரவலை கருத்தில் கொள்ள வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஆசிரியர்கள் காத்திருப்பு கூடங்களில் தனி மனித இடைவெளி சாத்தியமில்லை. மார்ச்சில் நடத்த திட்டமிட்டனர், பின்னர் ஜூன் 1 நடத்த திட்டமிட்டனர் பின்னர் ஜூன் 15 தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள் ஏற்கனவே தேர்வு 2 மாதங்கள் தள்ளிப்போகியுள்ளது. அனைத்து தரப்புக்கும் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
கொரோனா சிகிச்சையில் மேலும் 70 தனியார் மருத்துவமனைகள்
இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ - தேர்வுக்கு முன்பாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டியதும் அவசியம். பள்ளிகளை திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்க மத்திய அரசு மே மாதம் 13 அறிவுறுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமே 10 வகுப்பு தேர்வை எதிர் கொள்ள மொத்தமுள்ள மாணவர்களில் 30 % பேர் உள்ளனர். எனவே ஜூலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது நீதீபதிகள் - லட்சக்கணக்கன மாணவர்களின் நலனில் அரசு எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள். மாணவர்கள் எப்படி தேர்வுக்கு வருவார்கள். ஒரு மாதம் தள்ளிவைக்காமல் தேர்வை நடத்த ஏன் அவசரம் காட்டப்படுகிறது. மாணவர்களின் தலைக்கும் மேல் கத்தி தொங்குவதை பார்த்து கொண்டிருக்க முடியாது என தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் - இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராக இருக்கிறார். ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் ஜூன் 11 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடும் செய்யப்படும். கட்டுப்படுத்தபட்ட பகுதி மாணவர்கள் வெளியில் வர வேண்டியில்லை. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்கிறோம் விசாரணை தள்ளிவைக்க வேண்டும் என தெரிவித்தார்
அப்போது நீதிபதிகள் - தொடர்ந்து அறிக்கை மட்டும் தாக்கல் செய்வதால் என்ன பலன்? ஏற்கனவே மே 3வது வாரம் அறிவித்தீர்கள் ஆனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வதை கவனிக்கவில்லையா? தற்போது சுமார் 35 ஆயிரம் பாதிப்பில் சுமார் 26 ஆயிரம் பேர் சென்னையில் மட்டுமே உள்ளனர். ஜூன் 30 வரை ஊரடங்கு உள்ள நிலையில் எந்த நடவடிக்கை மேற்கொள்ள கூடாத நிலையில், 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறை என அனைவரும் இக்காட்டான நிலைக்கு உள்ளாக வேண்டுமா? ஊரடங்கு காலத்திலேயே 10ஆம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள் பள்ளிகளை திறப்பதிலேயே ஜூலையில்தான் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசு கைட்லைன்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், அதை நீங்களே மீறுவீர்களா? 9 லட்சம் இளம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விசயம் இது என தெரிவித்தனர்.
பள்ளி கல்வி சிறப்பு வழக்கறிஞர் முனுசாமி : சில மாநிலங்கள் தேர்வை முன்கூட்டி நடத்திவிட்டன. 11, 12 வகுப்புக்கு தலா ஒரு தேர்வு மட்டுமே பாக்கி உள்ளது தேவையான அனைத்து முன்னேற்பாடு எடுக்கபடும் என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் இன்றைய விசாரணையல் அரசு தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராக வில்லை என்றால் 10 வகுப்பு தேர்வுக்கு தடை விதிப்பது தொடர்பாக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.பின்னர் தேர்வை ஜூன் 15 ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் எனவும் என் தேர்வை ஜூலை 2வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பதை அரசு இன்று பிற்பகல் 2:30 மணிக்கு தெரிவிக்கும்படி, அரசு தரப்பு வழக்கறிஞர்க்கு உத்தரவிட்டு விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு தள்ளிவைத்தனர்.
பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், எதிர்வரும் நாட்களில் தமிழகத்தில் 2 லட்சம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் என விஞ்ஞானிகள் அறிக்கை அளித்துள்ளனர். அதனால், பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்பதால் தேர்வுக்கு தடை விதிக்க கூடாது… அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என வாதிட்டார்.
ஊரடங்கை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் மாநில அரசு, தேர்வு நடத்த முடியுமா என, அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், பத்தாம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைக்கக் கோரி ஏற்கனவே தொடரப்பட்ட 11 வழக்குகளும் ஜூன் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமான இந்த தேர்வை, மற்ற 11 மாநிலங்கள் நடத்தி முடித்து விட்டதால், தமிழகத்தில் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு தேர்வுகளை நடத்த அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளித்து, மாணவர்கள் மாஸ்க் அணிந்துவருவது உள்ளிட்ட மத்திய அரசு அறிவித்த நடைமுறைகள் பின்பற்றி தேர்வுகள் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் எனவும், மாணவர்கள் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதைத் தவிர, மாணவர்கள் உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள் எனவும், அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
தற்போது, மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை… இனி வரும் நாட்களில் தொற்று பரவல் அதிகமாகும் என்பதால், பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானது… தேர்வு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்டால் பேராபத்தாக அமையும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
10 லட்ம் மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ஒன்பது லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்களின் வாழ்வில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை மாதம் நடத்தலாமே எனவும் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்வை தள்ளிவைக்க முடியுமா என பரிசீலிக்க வேண்டும் எனவும், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன், இந்த வழக்கையும் சேர்த்து ஜூன் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.