தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில், தங்கள் சொத்து விவரங்களைத் தெரிவித்துள்ளனர். அதன்படி, கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் வேட்பாளர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். இன்று மாலையுடன் (மார்ச் 27) வேட்புமனுத்தாக்கல் நிறைவடைகிறது. திங்கள்கிழமை மட்டும்சுமார் 405 வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, தி.மு.க வேட்பாளர் டி.ஆர். பாலும், பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க-வின் பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், தே.மு.தி.க-வின் விஜய பிரபாகரன் ஆகியோர் அவர்களுடைய வேட்புமனுவில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது.
தி.மு.க வேட்பாளர் டி.ஆர். பாலு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் சொத்து மதிப்பு ரூ. 45.71 கோடி என வேட்பு மனுவில் தெரிவிக்கப்படுள்ளது. அதில் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ரூ.5.51 கோடிக்கு அசையும் சொத்து, ரூ.40.21 கோடிக்கு அசையா சொத்து; ரூ.8.06 கோடிக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி
தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியுமான சௌமியா அன்புமணிக்கு ரூ.48.18 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது கணவர் அன்புமணி பெயரில் ரூ.6.85 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்
முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். பொன். ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவில் தனக்கு ரூ.7.63 கோடி சொத்து இருப்பதாகவும் அதில் ரூ.6.99 கோடிக்கு அசையா சொத்துகளும், ரூ.64 லட்சத்திற்கு அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு எந்தவித கடனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க வேட்பாளர் அருண் நேரு
தி.மு.க அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். அவருடைய வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களின்படி, அருண் நேருவுக்கு ரூ.46.20 கோடி சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் கையிருப்பில் ரூ.2.14 லட்சம் ரொக்கமும், ரூ.27.11 கோடி முதலீடுகளிலும் செலுத்தியிருக்கிறார். இவருக்கு 7 வங்கி கணக்குகள் இருக்கின்றன. இது தவிர சுமார் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 480 கிராம் தங்கம் வைத்திருக்கிறார்.
தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரன்
மறைந்த நடிகர் விஜயகாந்த் மகனுமான விஜய பிரபாகரன், இவர் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.17 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் ரூ.11.38 கோடி அசையும் சொத்து என்றும், ரூ.6.57 கோடி அசையா சொத்து எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் பெயரில் ரூ.6.49 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.48 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருக்கின்றன. விஜய பிரபாகரனுக்கு ரூ.12 கோடி கடனும், பிரேமலதா விஜயகாந்த்துக்கு ரூ.5 கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேவநாதன்
பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன், சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவில், ரூ.300 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது மனைவி பெயரில் ரூ.25 கோடியும், மகள் இருவரின் பெயரில் தலா ரூ.40 கோடியும் இருக்கின்றன.
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவில் ரூ.127 கோடி சொத்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்
தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ரூ.19 கோடி சொத்து இருப்பதாகவும், அவரது கணவருக்கு ரூ.3.92 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழிசை பெயரில் ரூ.60 மதிப்பிலும், அவரது கணவர் பெயரில் ரூ.13.70 மதிப்பிலும் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் குடும்பத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.31.94 கோடி என்று தெரிவித்துள்ளார். நாகேந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரா நாகேந்திரன் ஆகியோர் ரூ.3.84 கோடி மதிப்பிலான 800 சவரன் தங்கம் வைத்துள்ளனர். எம்.ஏ., பட்டதாரியான நயினார் நாகேந்திரன் பெயரில் நான்கு கார்கள், 1 டிராக்டர் உள்ளது. அவருக்கு ரூ.5.1 கோடி கடன் உள்ளது, 13 வங்கி கணக்குகள் உள்ளன. அதில் நான்கு கணக்குகளில் ஜீரோ பேலன்ஸ் உள்ளது.
நயினார் நாகேந்திரனும் அவருடைய மனைவியும், சந்திரா ஹோட்டல், ஸ்ரீ கிருஷ்ணன் இன், சோப்ரோஸ் ஹோட்டல், லட்சுமி காயத்திரி ஹோட்டல், கல்யாணி டிரஸ்ட் மற்றும் கேஆர் டிராவல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.