காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளத்தில் இருந்து தமிழகம் வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
இது குறித்து கே.எஸ்., அழகிரி செய்தியாளர் சந்திப்பில், “ராகுல் காந்தி கேரளத்தில் இருந்து வருகிற 29ஆம் தேதி கூடலூர் வருகிறார். இங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்கிறார். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்கள் எனப் பார்கிறது.
இதைத் தான் ராகுல் காந்தியும் ஒவ்வொரு முறையும் கூறுகிறார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர் இல்லை எனக் கூறுகிறது.
மகாத்மா காந்தியடிகளும் இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்தியர் என்றே கூறினார். இந்தியர்கள் மத வேற்றுமை கடந்து அனைவரும் போராடிதான் சுதந்திரம் பெற்றனர்” என்றார்.
தொடர்ந்து, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, “காலை 11 மணிக்கு ராகுல் காந்தி கூடலூர் வருகிறார். பின்னர் உணவருந்திவிட்டு படுகர் மற்றும் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார்.
தொடர்ந்து என்ஜிஓ அமைப்புகள் அவரை சந்திக்கிறார்கள். அதன்பின்னர் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு ராகுல் காந்தி கர்நாடகம் செல்கிறார்” என்றார்.
செய்தியாளரின் கேள்வியும், கே.எஸ்., அழகிரியின் பதிலும்
இதையடுத்து அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினார்கள்.
அதற்கு, “ஆர்.எஸ்.எஸ்., பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., இயக்கம் என அனைத்தும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இயக்கங்கள் ஆகும். ஆகவே ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தினால் அனுமதி, எஸ்டிபிஐ பேரணி நடத்தினால் அனுமதி மறுப்பு என்பது சரியல்ல.
மேலும் காந்தி ஜெயந்தி தினத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
திருமாவளவன் எடுத்த முடிவிற்கு காங்கிரஸ் உடன்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., வன்முறை பின்புலம் கொண்ட இயக்கம். அந்த வன்முறை தான் மகாத்மா காந்தியடிகளின் படுகொலைக்கு வழிவகுத்தது” என்றும் கே.எஸ். அழகிரி கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி-காஷ்மீர் நடைபயணத்தை தொடங்கி கேரளா சென்றுள்ளார். அங்கு நடைபயணத்தை முடித்துகொண்டு தமிழ்நாடு வழியாக கர்நாடகா செல்லவுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.