பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான விரைவுச்சாலை பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
பெங்களூரு மற்றும் சென்னை இடையே நடைபெற்று வரும் விரைவுச்சாலை பணிகளில், தமிழகத்தில் 65 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கி 105.7 கி.மீ தொலைவிற்கு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விரைவுச்சாலை ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி ஆந்திர மாநிலத்தின், குடிபாலா பகுதியில் முடிவடைந்து பெங்களூருவை அடைகிறது. இப்பணிகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவை சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண தூரத்தை கணிசமாக குறைக்குமென தேசிய நெடுஞ்சாலை துறையின் வட்டாரம் தெரிவிக்கிறது.
வாலாஜாபேட்டையில் இருந்து அரக்கோணம் வரையிலான 24.50 கி.மீ சாலை பணிகள் சுமார் 84 சதவீதத்திற்கும் மேலாக நிறைவடைந்துள்ளது. இந்த பிரிவில் குடிமராமத்து பணிகளுக்காக ரூ. 662.7 கோடியும், பயன்பாடுகளுக்காக ரூ. 20.46 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, குடிபாலா - வாலாஜா பகுதியில் 24 கி.மீ சாலை பணிகள் 70 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. மேலும், காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 31.07 கி.மீ சாலையில் 64 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. அரக்கோணம் - காஞ்சிபுரம் வரையிலான சாலை பணிகள் 52 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இத்திட்டம் பசுமைவெளியை உள்ளடக்கியதால், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவில்லை. விரைவுச்சாலையில் இருந்த மின்கோபுரங்களை மாற்றுவதில் சவால்களை சந்தித்தோம். சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இத்திட்டம் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படுகிறது“ என பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் 34 பெரிய பாலங்கள் மற்றும் 31 சிறிய பாலங்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஒருங்கிணைந்து 15 கி.மீ தொலைவிற்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் 840 மீட்டர் தொலைவிற்கு நீளமான பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் 6 சுங்கச்சாவடிகள் இயக்கப்படவுள்ளதாககவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“