தமிழகத்தில் 5,329 அரசு மதுபானக் கடைகள் இயங்கி வந்த நிலையில், அதில் 500 கடைகள் மூடப்பட்டன என கடந்த மாதத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், டாஸ்மாக்கில் மது விற்பனை சரிவைக் காண தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ 150 கோடி வரை மது விற்பனையாகி நிலையில், தற்போது விற்பனை 25 சதவிதம் சரிந்து, 35 கோடி ரூபாய் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டது தான் என அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் டெண்டர் விடாமல் செயல்பட்டு வந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டதுடன், 500 மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்பட்டதால் வருமானம் குறைந்துள்ளதாக தெரிகிறது. சில்லறை விற்பனை குறைந்துள்ளதால், விரைவில் டாஸ்மாக் கடைகளில் பார் அமைப்பதற்கான டெண்டர் விட அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், "பணியாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதுதான் எங்களின் முதல் நடவடிக்கை. டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை, வங்கி அதிகாரிகள் நேரடியாக வந்து வாங்கிக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உரிமம் உள்ளவர்கள் மட்டும்தான் பார் நடத்த முடியும். உரிமம் பெற்றவர்கள் விதிகளை பின்பற்றிதான் நடத்த வேண்டும். அதிகாரிகள் இதைக் கண்காணித்து வருகிறார்கள். உரிமம் இல்லாமல் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு இல்லை. 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்கள் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருமானத்தை அதிகரிப்பது நோக்கமல்ல, தவறான பாதைக்கு சென்றுவிடாமல் தடுப்பதுதான் நோக்கம். குடிப்பதை நிறுத்தி, அதனால் வருமானம் குறைந்தால் பிரச்சினை இல்லை.
டெட்ரா பாக்கெட் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். டாஸ்மாக் கடைக்கான நேரத்தை மாற்றியமைப்பது குறித்து முடிவு செய்யவில்லை. டாஸ்மாக் கடைகளில் கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil